உள்ளூர் செய்திகள்

சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.சி.ஐ., குழு ஆய்வு

சென்னை: சென்னை மருத்துவ கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்துவது தொடர்பான, இந்திய மருத்துவ கவுன்சில்(எம்.சி.ஐ.,) குழுவின் ஆய்வு, நேற்று துவங்கியது. சென்னை மருத்துவ கல்லூரியில், 165 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதை, 250 ஆக உயர்த்த அனுமதி கோரி, கல்லூரி நிர்வாகம், எம்.சி.ஐ.,யில் விண்ணப்பித்தது. அதன்படி, ஜெய்ப்பூர், எஸ்.எம்.எஸ்., மருத்துவ கல்லூரி பேராசிரியர் சம்மம் ராம்வர்மா, கர்னூல் மருத்துவ கல்லூரி நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் சுரேகா, இம்பால் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் சியாம் ஓசிங் ஆகியோர் கொண்ட, எம்.சி.ஐ., குழு, சென்னை மருத்துவ கல்லூரியில், தமது இரண்டு நாள் ஆய்வை, நேற்று துவக்கியது. கல்லூரியின் பல்வேறு துறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், மாணவர் விடுதி, சென்னை அரசு பொது மருத்துவமனையின், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்கள் மற்றும் சென்னை மருத்துவ கல்லூரியின் இணைப்பு நிறுவனமான, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய இடங்களில், எம்.சி.ஐ., குழுவினர் ஆய்வு நடத்தினர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர்களின் அடையாள அட்டையில் உள்ள அடிப்படை விவரங்களையும் அவர்கள் சரிபார்த்தனர். எழும்பூர் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைகள், சென்னை மருத்துவ கல்லூரிக்கு, சென்டரலில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் ஆகிய இடங்களில், எம்.சி.ஐ., குழு ஆய்வு நடத்தது என, கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்