உள்ளூர் செய்திகள்

பயன்பாடற்று கிடக்கும் பள்ளி கட்டடத்தால் மாணவர்கள் அச்சம்

கண்ணன்கோட்டை: உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பயன்பாடற்று கிடக்கும், பழைய துவக்கப் பள்ளி கட்டடம், எந்த நேரத்திலும், இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதால், பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் அருகே, கண்ணன்கோட்டை கிராமத்தில், அச்சமநாயுடுகண்டிகை அரசினர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. அதில், 285 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த வளாகத்தில், மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டடம் ஒன்றில், இயங்கிய துவக்கப் பள்ளி, புதிய கட்டடத்திற்கு கடந்த, 2006ம் ஆண்டு மாற்றப்பட்டது. அதன் பின்னர், பழைய கட்டடத்தில் ஏற்பட்ட விரிசலின் ஆபத்து அறிந்து, பயன்பாடற்று மூடப்பட்டது. ஏழு ஆண்டுகளாக, இடிக்கப்படாமல் விடப்பட்டதால், தற்போது, அந்த பழைய கட்டடம், எந்த நேரத்திலும் விழக்கூடிய ஆபத்தான நிலையில், பல இடங்களில் பெரிய விரிசல்கள் கண்டுள்ளது. அந்த கட்டடத்தின் உட்புறத்தில் புதர் மண்டி கிடக்கின்றன. சுவர்களில் உள்ள பெரிய துவாரங்கள் வழியாக விஷ ஜந்துக்கள், அந்த புதர்களில் தஞ்சமடைந்துள்ளன. இதனால், உயர்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர், அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலும், தாமதப்படுத்தாமல் பழைய பள்ளி கட்டடத்தை இடிக்க வேண்டும் என, கண்ணன்கோட்டை பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன் கூறுகையில், "கூடிய விரைவில், அந்த பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு, நபார்டு திட்டத்தின் கீழ் உயர் நிலைப் பள்ளிக்கான, புதிய வகுப்பறை கட்டடம் நிறுவப்பட உள்ளது" என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்