தேர்வு பயத்தை போக்கியது ‘ஜெயித்துக்காட்டுவோம்’: மாணவர் கருத்து
பரமக்குடி: தினமலர் ‘ஜெயித்துக்காட்டுவோம் ’நிகழ்ச்சி எனது பயத்தை போக்கி விட்டதாக பள்ளி மாணவி கூறினார். பரமக்குடியில் நடந்த ஜெயித்துக்காட்டுவோம் 2008 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளின் கருத்துக்கள்:பத்தாம் வகுப்பு: ஏ. முனியசாமி (ஏ. வி. மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி): பாடங்களில் உள்ள முக்கிய கேள்விகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பாடங்களுக்கும் நேரம் ஒதுக்கி படிக்கிறேன். ஆர். ராஜேஷ்கண்ணன் ( அரசு மேல்நிலைப்பள்ளி, பார்த்திபனுனூர்): தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி நிச்சயம் என்பதை ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியின் மூலம் தெரிந்து கொண்டேன். எனக்கு நன்றாக தெரிந்த பாடங்களை மற்ற மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வேன். டி. வி. தாமோதரன் ( எஸ். என். வி உயர்நிலைப் பள்ளி, எமனேஸ்வரம்): பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைப்பதற்காக அனைத்து பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படித்து வருகிறேன். சாந்தப்பிரகாஷ் (ஏ. வி மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி): தினமும் காலை 4 மணிக்கே எழுந்து படித்து விடுவேன். ஆசிரியரின் அறிவுரைகளை கேட்டு பொதுத்தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன். பி. கஸ்தூரி (அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி): ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி எனது பயத்தை போக்கி விட்டது. பாடங்களை தெளிவாக படித்து நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்ற நம்பிக்கை வந்து விட்டது. ஏ. வேளாங்கண்ணி (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எமனேஸ்வரம்): பெற்றோரின் கஷ்டத்தை புரிந்து கொண்டு படித்து வருகிறேன். எல்லா பாடங்களுக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் கொடுத்து படித்து வருகிறேன். பிளஸ் 2: ஆர். அருண்பாண்டியன் (கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி): காலை ஐந்து மணிக்கு எழுந்து படித்து விடுவேன். இரவு 12 மணி வரை அனைத்து பாடங்களையும் படித்து விடுவேன். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதே எனது குறிக்கோள். பி. பாலமுருகன் (அரசு மேல்நிலைப் பள்ளி, முதுகுளத்தூர்): பாடங்களை மிகுந்த கவனத்துடன் படிப்பேன். டியூஷன் வைத்து படித்தால் தான் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபிறகு தெரிய வந்துள்ளது. ஜி. பாலபிரியன் (ஏ.வி.மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி): கஷ்டப்பட்டு படிப்பதை விட இஷ்டப்பட்டு படித்தால் தான் நல்ல நிலைக்கு வர முடியும் என்பதை ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன். எஸ். சுபாஸ்ரீ (சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி): இரவு அதிக நேரம் எல்லா பாடங்களையும் படிப்பேன். பொழுது போக்குக்காக அதிக நேரம் செலவழிக்காமல் கவனத்துடன் படித்து வருகிறேன். டி. சத்யா (பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, முதுகுளத்தூர்): நான் காலையில் தான் அதிக நேரம் படிப்பேன் . எந்த பாடமாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் படித்து வருகிறேன். ராமநாதபுரம் மாவட்டத்துக்கே கலெக்டராக வரவேண்டும் என்பதே எனது ஆசை. இவ்வாறு மாணவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.