சமுதாய மாற்றத்திற்கு தொலைநிலைக் கல்வி: துணைவேந்தர் பேட்டி
தொலைநிலைக்கல்வி முறையை பொருத்தவரை, ‘இக்னோ’ உலகளவில் சிறப்பு பெற்றுள்ளது. இந்தியாவில் மற்ற பல்கலைக்கழகங்கள் அவ்வாறு பெயர் பெறாததற்கு என்ன காரணம்? கல்வித்திட்டம், பரிசோதிக்கும் முறை ஆகியவை சிறந்த பல்கலைக்கழகத்திற்கு முக்கிய காரணிகள். இவற்றில் அனைத்து பல்கலைக்கழகங்களும் உரிய முறையில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி வழங்குவதோடு அதனை மாணவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை பரிசோதிக்க தேர்வுமுறை உதவுகிறது. ஆனால், சில பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வி என்பதற்காக சரியான தேர்வு முறையை கொண்டிருக்கவில்லை. தேர்வு மையங்களில் பெரும்பாலும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் இருப்பதில்லை. தேர்வு அறைகளில் மேற்பார்வையாளர்களாக தினசரி சம்பளம் அடிப்படையில் வெளிஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை, அனைத்து தேர்வு மையங்களிலும் பல்கலைக்கழக பணியாளர்களே மேற்பார்வையாளர்களாக செயல்படுகின்றனர். வேலை வாய்ப்புகளில் தொலைநிலைக்கல்வி முறையில் படித்தவர்கள் இரண்டாம்பட்சமாக கருதப்படுகிறார்களே? இந்தநிலை சிலசமயம் இருந்தாலும், ரெகுலர் கல்லூரிகளில் படிக்க முடியாதவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பதவி உயர்வு பெற விரும்புபவர்கள் போன்றோருக்கு தொலைநிலைக்கல்வி முறை வரப்பிரசாதமாக உள்ளது. இவர்களுக்காக, பல்வேறு துறைகளில் டிப்ளமோ, பட்டப்படிப்புகளை பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. இரண்டு, மூன்று ஆண்டுகளை நேரடிக் கல்வி முறையில் படிக்க இயலாதவர்கள் வருமானம் ஈட்டிக்கொண்டே தங்களது கல்வி தரத்தையும் உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பு தொலைநிலைக்கல்வி முறையில் அமைகிறது. பட்டம் பெறும் அதேசமயத்தில் பணி அனுபவத்தையும் பெற முடிகிறது. இம்முறையில் வேலை வாய்ப்பு படிப்புகளும் வழங்கப்படுகிறது. இப்படிப்புகளின் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயனடைகின்றனர். வேலையில்லாதவர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் கல்வி அளித்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்த உதவுகிறது. கணவரால் கைவிடப்பட்டோர், விதவை, உடல் ஊனமுற்றோர் போன்றாருக்கு இக்கல்வி முறை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இவ்வாறு, சமுதாய மாற்றத்திற்கு தொலைநிலைக்கல்வி முறை முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கல்வி முறையில் படிப்போர் தங்களது பொன்னான காலத்தை செலவழிக்காமல், படிப்போடு உரிய பணி அனுபவத்தையும் பெற்றுக்கொள்வதும் அல்லது கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்வதும் புத்திசாலித்தனம். அதேசமயம் மாணவர்களாக சுய ஆர்வத்தோடும், ஈடுபாட்டுடனும் படிக்க வேண்டியது அவசியம். படிக்கும் படிப்போடு தொடர்புடைய வேலை செய்பவர்கள், தாங்கள் கற்கும் கல்வியை உடனடியாக செயல்முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதனால், படிக்கும் காலகட்டத்திலேயே துறை சார்ந்த நெளிவு, சுழிவுகளை கற்றுக்கொள்ளலாம். சமுதாயக் கல்லூரி (கம்யூனிட்டி காலேஜ்) திட்டம் எந்த நிலையில் உள்ளது? ஏழைகள், அனாதைகள், ஆதரவற்றவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் அற்புத திட்டம் இது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போதிய கல்வி அறிவு இல்லாதவர்கள், வாழ்க்கையில் முன்னேறும் வகையில் பல்வேறு வேலை வாய்ப்பு படிப்புகள் வழங்கப்படுகின்றன. பியூட்டீசியன், கின்டர்கார்டன், டி.டி.பி., தையல் போன்ற பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்காக அரசின் உதவித்தொகையுடன் இப்படிப்பு வழங்கப்படுகிறது. சமுதாயத்தில் பின்தங்கியோரின் வாழ்க்கையில் ஒளி விலக்கேற்றும் இத்திட்டத்தில் பயனடைந்தவர்களிடம் பேசும்போது மனநிறைவு கிடைக்கிறது. இத்திட்டத்தினை மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த யு.ஜி.சி., அறிவுறித்தியதையடுத்து, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகாரிகள் தமிழகத்தில் பார்வையிட்டு சென்றுள்ளனர். ஒரே வளாகத்திற்குள் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு சில விதிகளை ஏ.ஐ.சி.டி.இ., தளர்த்தியுள்ளதே. இதனால், கல்வித்தரம் பாதிக்கப்படாதா? இன்ஜினியரிங், பார்மசி, மேனேஜ்மென்ட், கேட்டரிங், ஆர்கிடெக்சர் போன்ற படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அனுமதி அளிக்கிறது. இப்படிப்புகளை ஒரே வளாகத்திற்குள் (இன்டெக்ரேட்டட் கேம்பஸ் வித் மல்ட்டி டிசிப்ளின்) ஒரே நிர்வாகம் வழங்கி வந்தபோதிலும் இதுவரை, ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனி கம்ப்யூட்டர் லேப், மைதானம், நூலகம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்துவந்தது. தற்போது அந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. ஒரே வளாகத்திற்குள் பல்வேறு கல்வி நிலையங்கள் செயல்பட்டு வந்தாலும், அனைத்திற்கும் சேர்த்து ஒரே கம்ப்யூட்டர் சென்டர், மைதானம், அரங்கு, நிர்வாக அலுவலகம் இருந்தால் போதும். மேலும், அனைத்து கல்வி நிலையத்திற்கும் சேர்த்து இயக்குநர் பொறுப்பில் ஒருவர் இருந்தால் போதும். மற்றபடி, ஒவ்வொரு படிப்பிற்கும் டீன் நியமித்துக்கொள்ளலாம். ஒரே மேனேஜ்மென்ட்டின்கீழ் வேறு வளாகத்தில் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த விதி பொருந்தாது. ஒரே வளாகத்திற்குள் செயல்பட்டாலும் துறைக்கு ஒரு நூலகம், கம்ப்யூட்டர் லேப் ஆகியவற்றை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் கொண்டுள்ளன. எனவே, இந்த விதிமுறை தளர்வால் கல்வித்தரம் பாதிக்க வாய்ப்பில்லை. மற்றபடி, கல்வி நிறுவனங்கள் லாபம் பெறும். இதனால், மாணவர்களுக்கான கல்விக் கட்டணமும் குறையும். தமிழகத்தில் 15 கல்வி நிறுவனங்கள் அனுமதி பெறாத தொழில்நுட்ப படிப்புகளை வழங்குவதாக ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது. அக்கல்வி நிறுவனங்கள் மீதும், அந்தபடிப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா? நாட்டில் 205 கல்வி நிறுவனங்களில் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாத படிப்புகள் வழங்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, இதுபோன்ற அனுமதி பெறாத, போலி கல்வி நிறுவனங்கள் குறித்து மாணவர்களும், பெற்றோரும் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். எனினும், விண்ணப்பிக்கும் போதே உரிய அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் தானா? படிப்பு தானா? என்பதை ஆராய்ந்து விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து அந்த கல்வி நிறுவனங்களிடத்திலேயே விசாரிக்கலாம். அல்லது இணையதளங்களில் ஆராய்ந்து பார்க்கலாம். அக்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்யும். இவ்வாறு துணைவேந்தர் பழனிச்சாமி பதில் அளித்தார்.