உள்ளூர் செய்திகள்

பெண்கள் கல்வியில் முன்னேற்றம்: தினமலர் ஆசிரியர் நம்பிக்கை

சென்னை: “வரும் காலங்களில் பெண்கள் கல்வியில் பெரும் முன்னேற்றத்தைப் பெற்று, நமது சமுதாயங்களில் காணப்படும் பழைய இழுக்குகளை எல்லாம் அழித்து, வரதட்சணை கொடுமை போன்ற தீய பழக்கங்களை ஒழித்துக்கட்டி, முன்னேறிவிடுவர் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என ‘தினமலர்’ ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார். ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், ‘தினமலர்’ ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:இங்கு பெருந்திரளாக குவிந்திருக்கும் மாநகராட்சி பள்ளி மாணவர்களை பார்க்கும் போது எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதிகமான மாணவிகள் வந்திருக்கின்றனர். வரும் காலங்களில் பெண்கள் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை பெற்று, நமது சமுதாயங்களில் காணப்படும் பழைய இழுக்குகளை எல்லாம் அழித்து, வரதட்சணை கொடுமை போன்ற தீய பழக்கங்களை ஒழித்துக்கட்டி, முன்னேறிவிடுவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்காகத் தான் இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம். நீங்கள் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நடத்துகிறோம். இதை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியிலும், 4 - 5 மணி நேரம் மேடையில் ஓரமாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன். அப்போது ஒரு விஷயம் என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்தது. மாணவிகள் மிகவும் கட்டுப்பாடாக குறிப்பெடுத்து, பாடத்தை கவனமாக படித்தார்கள். அந்தளவுக்கு சில மாணவர்கள் இல்லை என்பது மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிப்புக்கு, உங்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திறன் இருக்கிறது. கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம். இயற்பியல் மற்றும் கணிதப் பாடம் கடினம் என்கின்றனர். ஆனால், இந்த பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்று ஆசிரியர்கள் புட்டு புட்டு வைக்கின்றனர். எந்தத் தவறைச் செய்யக் கூடாது, எதைச் செய்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம் என்றும் ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். இதை எல்லாம் மாணவர்கள் குறிப்பு எடுத்து, வீட்டுக்குச் சென்று அதை மீண்டும் வாசித்துப் பார்த்து, அதன்படி படிக்க வேண்டும். வறுமையில் வாடும் மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கக் கூடிய சக்தி கல்விக்கு உண்டு. அதை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டது, என் வாழ்வில் மறக்க முடியாக நிகழ்வு. அவரை மேடைக்கு அழைத்து வந்தபோது, அரங்கில் ஏற்பட்ட உற்சாகமும், மாணவர்களிடம் எழுந்த கரகோஷமும் கலாமை பிரமிக்க வைத்தது. தமிழ்த்தாய் ஈன்றெடுத்த மிகப் பெரிய மகன் அவர். அவரது நூல்களை எல்லாம் நீங்கள் விரும்பி படிக்க வேண்டும். நமது ஆசிரியர்கள் மிகவும் கவனமாக பாடங்களை நடத்துகின்றனர். சாதாரண மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால் எந்தெந்த கேள்விகளை படிக்க வேண்டும் என குறிப்பு தருவர். அவற்றை நீங்கள் கவனமாக குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த தேர்வுகளில் சாதித்த மாணவ, மாணவிகளை அழைத்து நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பேசச் சொன்னோம். அவர்களது அனுபவத்திலிருந்து ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. பள்ளி நேரத்தைத் தவிர 5 - 6 மணி நேரம் வரை அவர்கள் படித்தோம் என மாணவர்கள் கூறினர். இந்த ரகசியத்தை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். காலையோ, மாலையோ 5 - 6 மணி நேரம் பள்ளி நேரம் தவிர படியுங்கள். குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். திரும்பத் திரும்ப எழுதிப் பாருங்கள். மாணவர்களுக்கு மிகப் பெரிய பிரச்னை கணிதம், அறிவியல் கடினமாக இருக்கிறது என்பது தான். இந்த பாடங்களுக்கான ஆசிரியர் தரும் குறிப்புகளை கவனமாக கேட்டு குறிப்பெடுத்தால் கண்டிப்பாக 100க்கு 100 மதிப்பெண் பெற முடியும். இவ்வாறு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்