உள்ளூர் செய்திகள்

ஜி.சி.டி., கல்லூரியை கைப்பற்ற கமிட்டி: அரசாணை வெளியீடு

கோவை: கோவை அண்ணா பல்கலை வசம், ஜி.சி.டி., கல்லூரியை ஒப்படைப்பதற்காக 10 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரி (ஜி.சி.டி.,) சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியை கோவை அண்ணா பல்கலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர கடந்த இரு ஆண்டுகளாக கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்ததால், தற்காலிகமாக ஜி.சி.டி., கல்லூரியை கைப்பற்றும் முடிவை நிறுத்தி வைத்தது உயர்கல்வித்துறை. ஆனால், கோவை அண்ணா பல்கலை நிர்வாகம், மறைமுகமாக ஜி.சி.டி., கல்லூரியை கையகப்படுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் கனகச்சிதமாக முடித்து விட்டதால், ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்நிலையில் நவ., 6ம் தேதி, உயர்கல்வித்துறை ஒரு அரசாணை ( எண்: 442) வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை ஜி.சி.டி., கல்லூரி, நெல்லை ஜி.சி.இ., கல்லூரியில் உள்ள பணியாளர்களை, அண்ணா பல்கலைக்கு எடுத்துக் கொள்ள ஒரு கமிட்டியை அரசு உருவாக்கியுள்ளது. இதன் தலைவராக உயர்கல்வித்துறை செயலர் இருப்பார். நிர்வாக சீர்திருத்தத்துறை துணைச் செயலர் (விதி), தொழில்நுட்ப கல்வி ஆணையர் அலுவலக நிதி ஆலோசகர், முதன்மை கணக்கியல் அதிகாரி, தொழில்நுட்ப கல்வி ஆணையர், கோவை ஜி.சி.டி., கல்லூரி முதல்வர், திருநெல்வேலி ஜி.சி.இ., கல்லூரி முதல்வர், சென்னை, கோவை, திருநெல்வேலி பகுதிகளில் உள்ள அண்ணா பல்கலை துணைவேந்தர்கள் என ஒன்பது பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த கமிட்டி, பணியாளர்களை பல்கலைக்கு மாற்றுவது தொடர்பான ஆலோசனைகளை வழிவகுத்து அரசுக்கு தெரிவிக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் இறுதி முடிவே அரசாணையாக வெளிவரக்கூடும் என்பதால், ஜி.சி.டி., கல்லூரி ஆசிரியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் கூறுகையில், “ஜி.சி.டி., கல்லூரியை பல்கலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லக்கூடாது. ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திய பின்பே இறுதி முடிவை அரசு எடுக்க வேண்டும். இக்கல்லூரி பல்கலை வசம் சென்றால், மாணவர்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்துவோம்,” என்றனர். இந்நிலையில் ஜி.சி.டி., ஆசிரியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் ஒன்றிணைந்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில், ‘அனைத்து மாணவ, மாணவியரை ஒருங்கிணைத்து பேரணி நடத்துவது, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது’ என முடிவு செய்யப்பட்டது. வேறு கல்லூரிக்கு மாறுகிறதா துறைகள்? அரசு நடத்தும் இன்ஜி., கல்லூரிகளில் கோவை ஜி.சி.டி., கல்லூரியில் மட்டுமே பி.இ., எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், புரொடக்ஷன் ஆகிய இரு பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. இந்த இரு பிரிவுகளையும், வேறு கல்லூரிக்கு மாற்றலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் பரிந்துரைத்துள்ளது. இதனால், இத்துறையில் படித்து வரும் மாணவ, மாணவியர் பீதியடைந்துள்ளனர். இந்த பாடப்பிரிவுகளை பர்கூரிலுள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு மாற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஜி.சி.டி., கல்லூரியில் இருந்து எந்தப் பாடப்பிரிவையும் வேறு கல்லூரிக்கு மாற்ற முடியாது, ஜி.சி.டி., கல்லூரி நல்ல தரத்தில் உள்ளது, அதை மேம்படுத்த வேண்டிய அவசியம் கோவை அண்ணா பல்கலைக்கு இல்லை. வேறு அரசு பொறியியல் கல்லூரியை கையகப்படுத்தி, அந்த கல்லூரியை மேம்படுத்த பல்கலை முயற்சிக்கலாம் என கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்