உள்ளூர் செய்திகள்

தேசிய கடல்சார் பல்கலைக்கு முதல் துணைவேந்தர் நியமனம்

சென்னை: சென்னையில் புதிதாக அமைக்கப்படவுள்ள தேசிய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, தேசிய கடல்சார் அகடமியின் இயக்குனர் விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பாலு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:புதிதாக அமையவுள்ள தேசிய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, தேசிய கடல்சார் அகடமியின் இயக்குனர் விஜயனை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நியமித்துள்ளார். விஜயன், மூன்று ஆண்டுகள் இப்பதவியை வகிப்பார். சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கவுள்ள தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு மும்பை, கோல்கட்டா, விசாகப்பட்டினம் மற்றும் இதர இடங்களிலும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. தேசிய கடல்சார் பல்கலைக் கழகம் 245 கோடி ரூபாய் நிதியில் உலகத் தரத்தில் அமைக்கப்படும். பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 1,500 கோடி ரூபாய் நிதியில் தேசிய கடல்சார் காம்ப்ளக்சையும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், கடல்சார் அருங்காட்சியகம், ஆர்ட் கேலரி, மீன்கள் கண்காட்சிக் கூடம், கடல்சார் வர்த்தக மையம், கேட்டரிங் கல்லூரியுடன் இணைந்த உணவு விடுதி, உலகத்தரம் வாய்ந்த கூட்ட அரங்கம் ஆகியவை இடம்பெறும். தேசிய கடல்சார் பல்கலைக் கழகத்திற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கும். தேசிய கடல்சார் காம்ப்ளக்ஸ் திட்டம், தனியார் - பொதுத்துறை கூட்டு முயற்சியில் உருவாக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கடல்சார் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள விஜயன், பொருளாதாரத்தில் எம்.ஏ., பட்டமும், மும்பை பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்