உள்ளூர் செய்திகள்

கணினியை கையாளும் மாணவியரின் கரங்கள், வயல்வெளியையும் கையாள்கிறது

கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவியர் குழுக்களாக பிரிந்து, ஈரோடு மாவட்டத்தில் கோபி, டி.என்.பாளையம், நம்பியூர், அந்தியூர், பவானி, அம்மாபேட்டை ஆகிய வேளாண் வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் தங்கி, களப்பணி பயிற்சி பெறுகின்றனர். பயிர் சாகுபடி முறை, விவசாயிகளின் சமூக பொருளாதார நிலை, மண் வளம் உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களை மாணவியர் சேகரித்து வருகின்றனர். மேலும், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக நிர்வாகம் குறித்து 15 நாட்கள், கிராம தங்கல் திட்டத்தில் 30 நாட்கள், தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து 15 நாட்கள், வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகளில், 17 நாட்கள் என மொத்தம் இரண்டரை மாதங்கள் பயிற்சி பெறுகின்றனர். கோபி மற்றும் டி.என்.பாளையம் வட்டாரத்தில் பயிற்சி பெறும் மாணவியர், 14 பேரும், ஒன்றிணைந்து செய்யாம்பாளையத்தில் ஒரு விவசாய நிலத்தில் திருந்திய நெல் நாற்று நடவு செய்து பயிற்சி பெற்றனர். திருந்திய நெல் சாகுபடி செய்வதன் அவசியம் குறித்தும், அதனால் கிடைக்கும் நன்மைகள், மகசூல் அதிகரிப்பு, மேட்டுபாத்தி நாற்றங்கால் அமைப்பது குறித்து மாணவியர் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: "கம்ப்யூட்டர் காலத்தில் மாணவிகள் நேரடியாக எங்களோடு வயல்வெளியில் பயிற்சி பெறுவது, எதிர்கால விவசாயத்தின் மேல் எங்களுக்கு உள்ள கவலையை நீக்கி, நம்பிக்கையை அளித்திருக்கிறது." என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்