உள்ளூர் செய்திகள்

சட்ட பல்கலைக்கழக நிர்வாகம்: கன்வீனர் கமிட்டி அமைப்பு

சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், விஜயகுமாரின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, பல்கலையை நிர்வகிக்க, சட்டச் செயலர் ஜெயச்சந்திரன் தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு, அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைத் துணைவேந்தராக, விஜயகுமார், 2010, ஜூலை, 28ம் தேதி பொறுப்பேற்றார். இவர் பதவிக் காலம், 2013, ஜூலை, 27ம் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து, பல்கலைப் பணிகளைக் கவனிக்க, சட்டச் செயலர் ஜெயச்சந்திரன் தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. சட்டக் கல்வி இயக்குனர் நாராயண பெருமாள், பார் கவுன்சில் தலைவர் செல்வம், பார் கவுன்சில் ஆப் இந்தியா உறுப்பினர் பிரபாகரன், சட்டப் பல்கலைப் பேராசிரியரும், முன்னாள் பதிவாளருமான கோபால், சிண்டிகேட் உறுப்பினரும், வழக்கறிஞருமான சந்திரசேகர் ஆகியோர் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். சட்டப் பல்கலைக்குப் புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரை, இக்குழு நிர்வாகப் பணிகளைக் கவனிக்கும். மேலும், இன்று முதல், இக்குழு பொறுப்பை ஏற்கும் என, பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்கலை துணைவேந்தர் பதவிக் காலம் முடிவடைவதற்கு, மூன்று மாதங்களுக்கு முன், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய, துணைவேந்தர் தேர்வு குழு அமைக்கப்படும். இக்குழுவில், சிண்டிகேட் பிரதிநிதி, செனட் பிரதிநிதி மற்றும் அரசு பிரதிநிதி ஆகியோர், உறுப்பினராக நியமிக்கப்படுவர். ஆனால், சட்டப் பல்கலையில், புதிய துணை வேந்தரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழு, இதுவரை அமைக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்