ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து கலைநிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு
தேனி: ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தி மாவட்டங்களில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால், குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்வதற்கான உணவுமுறைகள், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து, கிராம மக்களிடம் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாவட்ட அளவில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வழி காட்டுதலின் படி, ஒவ்வொரு வட்டாரத்திலும், கிராம மக்கள் கூடும் இடங்களில், ஆக., 23 வரை, 12 நாட்கள், மாலை வேளையில், நாடகம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். தமிழகத்தில் முதல் கட்டமாக, தேனி, சிவகங்கை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, 12 மாவட்டங்களிலும், அடுத்த கட்டமாக, மதுரை, புதுக்கோட்டை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.