வெளிநாட்டு வாழ் தமிழர்கள் புள்ளி விவரம் சேகரிப்பு
சென்னை: வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் புள்ளி விவரங்கள், அரசு துறைகளிடம் இல்லாத நிலை நிலவுகிறது. இதற்கு, வெளிநாடு செல்லும் முறையில், நிலவும் குளறுபடிகளே காரணம் என, கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன், கென்ய தலைநகர் நைரோபியில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில், 30க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இதில், சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் நடராஜன் 40 உயிரிழந்தார். அவரது மனைவி மஞ்சுளா குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கென்யாவில் தமிழர்கள் எத்தனை பேர் உள்ளனர், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து, தமிழக அரசின், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையிடம் விசாரித்தபோது, அது பற்றிய புள்ளி விவரங்கள் அரசிடம் இல்லை. வெளிநாட்டு வாழ் தமிழர் பற்றிய முழு புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நடவடிக்கை, தற்போது நடந்து வருகிறது என்றனர். வெளிநாடு செல்பவர்கள், பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் செல்லும்போது தான், அவர்கள் பற்றிய விவரங்கள் அரசுக்குக் கிடைக்கிறது. சுயமாகவோ, பதிவு செய்யாத முகவர்கள் மூலமோ, வெளிநாடு செல்லும்போது, அவர்கள் பற்றிய விவரங்கள், அரசுக்குக் கிடைப்பதில்லை. பதிவு செய்த முகவர்கள் மூலம், வெளிநாடு சென்றுள்ள தமிழர்களின் எண்ணிக்கை, 2.80 லட்சம் பேர் என, வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை தெரிவிக்கிறது. பிற வழிகளில், வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை, பதிவு செய்து முகவர்கள் மூலம் சென்றவர்களை விட, குறைந்தது, ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகம் என்றும் கூறுகின்றனர். முகவர்களாக பதிவு செய்ய, 20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யவேண்டும். பதிவு செய்த முகவர்கள் மூலம், வெளிநாடு செல்பவர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பு, தொழில், வெளிநாடுகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, முகவர்கள் பொறுப்பாவர். இதனால், பெரும்பாலான முகவர்கள், பதிவு செய்ய முன்வருவதில்லை. பதிவு செய்யாத முகவர்கள் மூலம் செல்பவர்களின் விவரங்கள், அதிகாரப்பூர்வமாக அரசுக்குக் கிடைப்பதில்லை. மேலும், சுயமாக வெளிநாடு செல்பவர்களும், தாங்கள் வெளிநாடு செல்வது குறித்த விவரங்களை, அரசுக்குத் தெரிவிப்பதில்லை. இந்நிலையில், வெளிநாடு செல்லும் தமிழர், தங்கள் ஊரின் கிராம நிர்வாக அலுவலரிடம், வெளிநாடு செல்வது குறித்து, பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு, இதற்கான சுற்றறிக்கைகள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் விமான நிலையங்களில் உள்ள, குடியுரிமைத் துறை சோதனை மையங்களில், கடந்த, நான்கு ஆண்டுகளில், வெளிநாடு சென்ற தமிழர்களின் புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணியை, வெளிநாடு வாழ் தமிழர் துறை மேற்கொண்டு வருகிறது. சென்னை, மும்பை விமான நிலையங்களிலிருந்து, இந்த விவரங்கள் கிடைத்துள்ளதாகவும், திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து விரைவில், இத்தகவல் கிடைத்துவிடும் என்றும், தமிழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இத்தகவல்கள் கிடைத்தால் தான், வெளிநாட்டு வாழ் தமிழர்களின் எண்ணிக்கை முழுமையாகக் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.