வீடியோ மென்பொருள் துறையில் இந்திய மாணவர் சாதனை
அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் அந்த நாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து போட்டோ எம்பெட்டிங் என்ற வீடியோகிராபி துறையில் அசாத்திய சாதனை புரிந்துள்ளனர். ஸூனாவிஷன் (Zunavision) என்ற இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக வீடியோ படங்களை பார்க்க முடிவதுடன் தேவைப்பட்டால் இடையே புகைப்படங்களையும் இணைக்க முடியும் என்பதே இந்த சாதனையின் சாராம்சம். அமெரிக்காவின் சயின்ஸ் டெய்லி நாளிதழில் இது தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களுடன் அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்துவரும் இந்திய மாணவர்களான அசுதோஷ் சாக்ஸேனா, சித்தார்த் பத்ரா ஆகியோர் இணைந்து இதை கண்டு பிடித்துள்ளனர். ஸூனாவிஷன் சாப்ட்வேர் மூலமாக ஒரு வீடியோ பதிவின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புகைப்படத்தையோ, வீடியோவையோ எளிதாக இணைக்க முடியும். உதாரணமாக நமக்கு மிகவும் பிடித்த பாடலின் பதிவில் கரோக்கி செய்வதுடன் நமது பதிவையும் இணைக்க முடியும். வீடியோ பதிவுகள் மற்றும் விளம்பர பதிவுகளை இணைய தளங்களில் வெளியிடுவது போன்ற பல்வேறு அம்சங்களிலும் இந்தப் புதிய தொழில்நுட்பம் பல மாறுதல்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. புதிய இணைப்புகளை இணைக்கும் போது அசல் வீடியோவிற்கு இணையாக அதை இணைக்க வசதிகள் அதிகம் தரப்படுவதால் ஒரிஜினல் படத்தில் உள்ளவாறே மாற்றப்பட்ட வீடியோ இருக்கும் என்பது இத்தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும். வீடியோ பதிவில் ஒருவரை புதியதாக இணைக்கும் முறை 3D Surface Tracker என்ற புதிய தொழில் நுட்பத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுவதும் இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். ஒரு மாதிரியை உருவாக்கி ஒவ்வொரு பிச்கல்களிலும் மாற்றங்கள் செய்ய வசதிகள் உள்ளதால் மாறுதல் செய்யப்பட்ட வீடியோவில் தத்ரூபமான இணைப்புகள் சாத்தியமாகிறது. ஏற்கனவே இது போன்ற வசதிகளுக்கான தொழில் நுட்பங்கள் இருந்தாலும் இந்த புதிய முறை விலை குறைவான குறைந்த நேரத்தில் முடிக்கக்கூடிய மற்றும் குறைவான தொழில்நுட்பத் திறன் தேவைப்படுவதாக இருப்பது இதன் சிறப்பம்சம் என கூறப்படுகிறது. எப்படியோ வீடியோ துறையில் உருவாகியுள்ள இந்த மாற்றத்திற்கு இந்திய மாணவர்கள் தான் முக்கியக் காரணம் என்பது தான் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் செய்தி.