இளம் தலைமுறையினருக்காக வெளிநாட்டு நாணயங்கள் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
ஈரோடு: ஈரோடு அருங்காட்சியகத்தில் புதிதாக 14 வெளிநாட்டு நாணயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஈரோடு சோலார்புதூர், நகராட்சி நகரை சேர்ந்த விஜய் என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஈரோடு அருங்காட்சியகத்தில் 14 வெளிநாட்டு நாணயங்கள், அக்காலத்தில் நம் நாட்டில் பயன்படுத்திய 13 நாணயங்களை ஒப்படைத்தார். சிங்கப்பூர் நாட்டின் 1991, 1983ம் ஆண்டு நாணயங்களான "சென்ட்", பிலிபைன்ஸ் நாட்டு 1993ம் ஆண்டு நாணயம் "பிசோ", ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் காண்பதற்கு அரிய நாணயங்களை ஒப்படைத்தார். உள்நாட்டு நாணயங்கள் வரிசையில் 1947ம் ஆண்டு இருந்த ஒரு பைசா, 1954ம் ஆண்டு கிடைத்த ஒரு பைசா, 1971ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஈயத்தால் ஆன ஒரு பைசா, 1936ம் ஆண்டு உருவான ஒரு அனா என, 13 நாணயங்களை ஒப்படைத்துள்ளார். தற்போது கிடைத்துள்ள வெளிநாட்டு, உள் நாட்டு நாணயங்கள் காண்பதற்கு அரிய வகையாகும். இவற்றை புதிய தலைமுறையினர் பார்த்திருக்க முடியாது. அரிய பொக்கிஷமாக எதிர்வரும் நாட்களில் நாணயங்கள் கருதப்படும், என அருங்காட்சியக ஊழியர்கள் தெரிவித்தனர்.