தீவிரவாதத்தை விட மோசமானது ஊழல்: கருத்தரங்கில் பேச்சு
கோவை: பாரதியார் பல்கலையில் உள்ள யு.ஜி.சி.,- கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரியில் ‘மனித உரிமைகள்’ பற்றிய புத்தொளி பயிற்சி துவக்க விழா டிச. 16ம் தேதி நடந்தது. இதில், ‘தீவிரவாதத்தால் பாதிக்கப்படுவோர் மற்றும் மனித உரிமைகள்’ என்ற தலைப்பில் சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் பேசியதாவது:சென்ற நூற்றாண்டில் போர் மற்றும் கலவரத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடி. தற்போதைய போர் முறை முற்றிலும் மாறுபட்டது; அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உலகில் அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகளிடம் மட்டும் 30 ஆயிரம் அணுகுண்டுகள் இருக்கின்றன. இவை இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட, அதிக அழிக்கும் திறன் கொண்டவை. இவற்றால் மனித சமுதாயம் அழியக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கிறது. நாட்டில் வாழும் மக்களின் பசியையும், அவர்களுக்கு வரும் நோயையும் போக்க வழியில்லை. ஆனால், எல்லா நாடுகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கின்றன. தீவிரவாதத்துக்கு உலகில் நூறு விதமான கருத்துக்கள் உண்டு. ‘எவையெல்லாம் மனித உரிமை’ என்று உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக் கொண்டது போல், ‘எது தீவிரவாதம்’ என்பதையும் உலக நாடுகள் ஒப்புக் கொள்ள வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொருவரும் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிரவாதம் மக்களின் பலத்தை பலவீனமாக்கிவிடும். தீவிரவாதத்தை நூறு சதவீதம் தடுக்க முடியாது. ஆனால், அதன் தாக்குதலைக் வெகுவாக குறைக்க முடியும். தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும்; அதே நேரத்தில் ஏன் தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்பதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். தீவிரவாதிகளின் கோரிக்கை உண்மையாக, நியாயமாக இருந்தால், அவற்றை நிறைவேற்ற வேண்டும். நியாயமில்லாத கோரிக்கையாக இருந்தால், அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்தியாவில் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி கிடைக்கவில்லை. வறுமைக்கோட்டிற்கு கீழ் 30 சதவீத மக்கள் வாழுகின்றனர். இந்நிலையில் வரும் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லராகும் எனக் கூறி வருகிறோம். காவல்துறை, ராணுவத்தினர் மட்டும் மனித உரிமை மீறல் செய்வதாக பலர் நினைக்கின்றனர். இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு பேர் தாக்கப்படுகின்றனர்; தினமும் மூன்று பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இது மனித உரிமை மீறல்தான். கல்வி, வேலையால் மட்டுமே மனித உரிமையை நிலைநாட்ட முடியும். தீவிரவாதத்தைவிட மோசமானது ஊழல். இந்த ஊழலால் தாக்கப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஊழல் இல்லாத நிர்வாகம் இருப்பது மிக அவசியம். இவ்வாறு சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் பேசினார். இந்த விழாவில், யு.ஜி.சி., கல்வியாளர் மேம்பாட்டு கல்லூரி இயக்குனர் தனிக்கொடி, பாரதியார் பல்கலை சமூகப் பணித்துறை தலைவர் சேதுராம சுப்பையா பேசினர்.