உள்ளூர் செய்திகள்

உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு சோலார் விளக்கு

சென்னை: "அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 13,154 பேருக்கு சூரிய ஒளி மின் விளக்கு வழங்கப்படும்" என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார். சட்டசபையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பதில் அளித்த அமைச்சர் சுப்ரமணியன் 13 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம்: * நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளில் சாரணர், சாரணியர் இயக்கத்தை சீரிய முறையில் செயல்படுத்த 207 பள்ளிகளுக்கு 1.13 கோடி ரூபாய் செலவிடப்படும். * 1,096 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் உள்ள விளக்கு, மின் விசிறி, குடிநீர் குழாயை பராமரிக்க 1.09 கோடி ரூபய் வழங்கப்படும். * மலைப்பகுதிகளில் இயங்கி வரும் 216 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 13,154 பேருக்கு சூரிய சக்தி மின் விளக்கு 73 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். * நலத்துறை பள்ளிகளில் படிக்கும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியரை, கல்வி சுற்றுலா அழைத்து செல்ல, 207 பள்ளிகளுக்கு, 51.75 லட்சம் ரூபாய் வழங்கப்படும். * பொறியியல் கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எம்.பி.ஏ. போன்ற மேற்படிப்பு படிக்க பொது நுழைவுத் தேர்வில் (சி.ஏ.டி.) தேர்ச்சி பெற வேண்டும். எனவே ஒவ்வொரு ஆண்டும் 100 பேருக்கு பயிற்சி அளிக்க 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும். * மாநிலத்தில் உள்ள 1,446 பள்ளிகளுக்கு தலா ஒரு முதலுதவிப் பெட்டி 3,400 ரூபாய் செலவில் வழங்கப்படும். * இத்துறை கீழ் செயல்படும் 185 பள்ளிகளில் 32,112 மாணவியர் படிக்கின்றனர். எனவே பள்ளிக்கு ஒரு நாப்கின் பர்னர் தலா 25 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும். * 207 பள்ளிகளுக்கு இடையே மாவட்ட மற்றும் மண்டல, மாநில அளவில் போட்டிகள் நடத்த சான்றிதழுடன் பரிசுகள் வழங்க 26 லட்சம் ரூபாய் செலவிடப்படும். * இத்துறை கீழ் இயங்கும் 1,397 பள்ளிகளில் படிப்பவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்டமாக பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்களுக்கு 16.80 லட்சம் ரூபாய் செலவில் யோகா பயிற்சி அளிக்கப்படும். * ஐ.ஏ.எஸ். மற்றும் டி.என்.பி.சி. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் பழங்குடியினத்தவர், முதன்மைத் தேர்வு எழுத ஆகும் இடைநிகழ் செலவை மேற்கொள்ள ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்