அரசு கலைக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது. விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் 2014-15ம் கல்வியாண்டி பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு, ஆகஸ்ட் 20ம் தேதி துவங்கி இரு தினங்கள் நடக்கிறது. கலந்தாய்வு தேதி விவரங்கள் குறித்து ஏற்கனவே விண்ணப்பத்துடன் உள்ள தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, எம்.எஸ்.சி., பட்ட மேற்படிப்பு கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பதாரர்களுக்கு இன்று(20ம் தேதி) காலை 10 மணி முதல் கலந்தாய்வு நடக்கிறது. தகுதியுள்ள அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம். இதேபோல் எம்.ஏ., ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பட்ட மேற்படிப்புகளில் சேர தகுதியுள்ள அனைத்து பிரிவினருக்கும், நாளை காலை 10:00 மணி முதல் கலந்தாய்வு நடக்கிறது. பாட வாரியான தரப்பட்டியல் கல்லூரியின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் பட்ட வகுப்பு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ்களின் மூலச்சான்று மற்றும் ஜெராக்ஸ் நகல்கள் கொண்டு வர வேண்டும். கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகள் கட்டணத் தொகையை உடன் செலுத்த தயாராக வர வேண்டும். இத்தகவலை கல்லூரியின் முதல்வர் கன்னிகா தெரிவித்துள்ளார்.