பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தர பெற்றோர் கோரிக்கை
வாலாஜாபாத்: அகரம் அரசு ஆதி திராவிடர் நலத் துறை துவக்கப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் அடுத்த அகரம் கிராமத்தில், ஆதி திராவிடர் நலத்துறை துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 57 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் ஒரு பகுதியில் மட்டுமே, சுற்றுச்சுவர் கட்டி உள்ளனர். எஞ்சியுள்ள மற்றொரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டவில்லை. இதனால், பள்ளி கட்டடத்தை சுற்றிலும் வேலி காத்தான் செடிகள் புதராக மண்டி உள்ளது. பள்ளி மாணவ, மாணவியர் விளையாடும் நேரங்களில், பந்து முள்வேலிக்குள் விழுந்து விடுகிறது. மேலும், பள்ளியை ஒட்டியவாறு மழைநீர் கால்வாய் செல்வதால், கால்வாய் முழுவதும் தண்ணீர் தேங்கி, சுகாதார சீர்கேடும் உள்ளது. எனவே, பள்ளி மாணவ, மாணவியரின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி, பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டித் தரவும், கால்வாயில் உள்ள தண்ணீரை அகற்றவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, துவக்கக் கல்வி துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு, சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தக்கோரி, உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளேன். ஒப்புதல் கிடைத்தவுடன் சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தித் தரப்படும்" என்றார்.