உள்ளூர் செய்திகள்

எம்.பி.பி.எஸ்., சேர பணமின்றி தவிக்கும் சாதனை மாணவர்

காரைக்குடி: மார்க்கெட்டில் மூட்டை தூக்கி, பிளஸ் 2வில் சாதித்து, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர சீட் கிடைத்தும், படிப்புக் கட்டணம் செலுத்த வழியின்றி, காரைக்குடி மாணவர் கே.நாகேந்திரன் தவித்து வருகிறார். காரைக்குடி தெற்கு தெரு, நாராயணன் பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். எஸ்.எம். எஸ்.வி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவரது தந்தை, தாய் இருவரும் தனியார் நிறுவனத்தில் கமிஷன் அடிப்படையில் வேலைபார்த்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து மாதம் 4,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். இந்த சம்பளம் மாணவரின் படிப்பிற்கு போதாத சூழலில், நாகேந்திரன், குடும்ப சூழ்நிலை அறிந்து, பிளஸ் 2 படிப்பிற்கு தேவையான நோட்டு, புத்தகங்களை வாங்குவதற்கு தேவைப்படும் பணத்தை பள்ளி முடிந்து மாலை, அதிகாலை, விடுமுறை நாட்களில் காய்கறி மார்க்கெட்டில் மூட்டைகளை தூக்கும் பணியில் ஈடுபட்டு சம்பாதித்தார். அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு படித்தார். எம்.பி.பி.எஸ்., சீட்: இவரது கஷ்டத்தை உணர்ந்த பள்ளி ஆசிரியர்கள், அவரது டியூஷன் படிப்பு செலவை தாங்களே ஏற்றனர். தேர்வு நேரத்தில் தந்தை வேலை இழந்த சூழலிலும், சோதனையை சாதனையாக மாற்றி முயற்சியுடன் படித்தார். அவரது முயற்சிக்கு கிடைத்த பரிசு தான் பிளஸ் 2 தேர்வில் 1,200க்கு 1,151 மதிப்பெண்கள். தவிப்பு: எம்.பி.பி.எஸ்., படிக்க ஆர்வம் கொண்ட இவர், மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தார். இவரது கட்- ஆப் மார்க் 197. தமிழக அளவில் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் வரிசையில் 661வது இடத்தில் இருந்தார். மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்றவருக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. வரும் 23ம் தேதி கல்லூரியில் சேரலாம் என சேர்க்கை உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 40 ஆயிரம் ரூபாய் தேவை. இதுதவிர,  ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவாகும். குடும்பப் பொருளாதார சிக்கலில் தவிப்பதால், எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்தும், முதலாண்டு படிப்பில் சேர தேவைப்படும் நிதி கிடைக்காமல் தவிக்கிறார். இவரது தவிப்பிற்கு நிதிஉதவி வழங்க விரும்புபவர்கள், கே.நாகேந்திரன், த/பெ வி.ஏ.கண்ணன், 10, நாராயணன் பிள்ளை சந்து, தெற்கு தெரு, காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்;  04565-250 478 என்ற போன் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்