உள்ளூர் செய்திகள்

கடல்சார் படிப்புக்கு அனுமதி: பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு

இன்டர்நேஷனல் மெரிடைம் அகடமியின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தாக்கல் செய்த மனுவில்,  நான்கு ஆண்டு நேவல் ஆர்கிடெக்சர் படிப்புக்கு, கடல்சார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தோம். எங்கள் கல்லூரியை ஆய்வுக் குழு நேரில் பார்வையிட்டு, இணைப்பு வழங்க பரிந்துரை செய்தது. ஆனால், பல்கலைக்கழகம் நிராகரித்து விட்டது.  எங்கள் கல்லூரிக்கு இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். மனுவை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் முத்துகுமாரசாமி, வக்கீல் எம்.எஸ்.ரமேஷ் ஆஜராகினர். நீதிபதி ஜோதிமணி பிறப்பித்த உத்தரவு:   இந்தப் படிப்பு புதியது அல்ல என்றும் சென்னை ஐ.ஐ.டி., ஆந்திரா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இதை நடத்துகிறது என்றும் மனுதாரரின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படிப்பை நடத்துவதால், மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஆய்வு செய்யப்போவதாக பல்கலைக் கழகம் தரப்பில் கூறுவது, ஒட்டுமொத்த நடைமுறையை கேலிக்கூத்தாக்குவது போல. இந்தப் படிப்பால் மாணவர்களுக்கு பயனில்லை எனக் கூறுவதற்கு எந்த ஆதாரத்தையும் பல்கலைக்கழகம் காட்டவில்லை. பொது நுழைவுத் தேர்வு எழுதி, இந்தப் படிப்பில் சேர்வதற்காக மாணவர்கள் பலர் காத்திருக்கும் நிலையில், மாணவர்களின் நலனை ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது என பல்கலைக் கழகம் எப்படி முடிவுக்கு வந்தது என தெரியவில்லை. படிப்புக்கான இடங்களை பகிர்வது தொடர்பாக, பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை பின்பற்றுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். மனதை செலுத்தாமல் பல்கலைக்கழகம் முடிவுக்கு வந்து, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆகையால், இணைப்பு கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. ஆய்வுக் குழுவின் அறிக்கையை அகடமிக் கவுன்சிலின் முன் வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் சட்டப்படி தகுந்த முடிவை அகடமிக் கவுன்சில், நிர்வாக கவுன்சில் எடுக்க வேண்டும். 16 வாரங்களுக்குள் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி ஜோதிமணி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்