கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி முற்றுகை
கூடலூர் கீழ்நாடுகாணி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, கடந்த 1967ம் ஆண்டு 8 சென்ட் நிலத்தில் துவங்கப்பட்டது. பள்ளியை நடுநிலையாக தரம் உயர்த்த பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். நடப்பு கல்வியாண்டில், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த உள்ளதாகவும், பள்ளியில் 5ம் வகுப்பு முடித்த மாணவர்கள், 6ம் வகுப்பை இங்கேயே தொடர ஒத்துழைக்க வேண்டும் என, கல்வித்துறை சார்பில் பெற்றோரிடம் வேண்டுகோள் விடப்பட்டது; 6ம் வகுப்பில், தமிழ் மற்றும் மலையாள மொழியில் 24 மாணவர்கள் படிக்கின்றனர்.தற்போது, சத்துணவு சமையல் அறையை தவிர, மூன்று அறைகள் கொண்ட கட்டடம் மட்டுமே உள்ளது; இதில் ஒன்று அலுவலகமாக செயல்படுகிறது. இடப் பற்றாக்குறையால் கட்டட வெளிவளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படிக்கின்றனர். இரு மாதங்களுக்கு முன், நடுநிலையாக தரம் உயர்த்தப்பட்டதாக, அரசு உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிக்கு வந்த 6ம் வகுப்பு மாணவர்களிடம், தலைமை ஆசிரியர், பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட உத்தரவு, ரத்து செய்யப்பட்டுள்ளது; பெற்றோரை அழைத்து வந்து மாற்று சான்றிதழை பெற்று, வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர வேண்டும் என, மாணவ, மாணவிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, மாற்று சான்றிதழ் வாங்க முடியாது; 6ம் வகுப்பை தொடர அனுமதிக்க வேண்டும். தவறினால், அனைத்து மாணவர்களையும் வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட செய்வோம் என தெரிவித்தனர். பெற்றோர் சார்பில், தலைமை ஆசிரியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. பள்ளியின் பி.டி.ஏ., தலைவர் ரசாக் கூறிகையில், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, காலாண்டு தேர்வு முடிந்து விட்டது. தற்போது, இடவசதி இல்லை எனக்கூறி, உத்தரவை ரத்து செய்து, 6ம் வகுப்பு மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படும். நடப்பு கல்வியாண்டில், 6ம் வகுப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்றார்.