உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சி

சென்னை: சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளில், ‘பிளஸ் 1’ மற்றும் ‘பிளஸ் 2’ பயிலும் மாணவ, மாணவியருக்கு உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல்  நிகழ்ச்சி கிண்டி பொறியியல் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் சார்பில் ‘விழித்திரு-2009’ என்ற பெயரில் சென்னை அண்ணா பல் கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சண்முகவேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வேலூர் வி.ஐ.டி.,யின்  மாணவர் நல திட்ட இயக்குனர் சிதம்பரம் கலந்து கொண்டு பேசும்போது, உயர்கல்வி பற்றிய விவரங்கள், படிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார். பெங்களுரில் உள்ள கல்வி ஆராய்ச்சி உதவி மற்றும் பயிற்சி மையத்தின் அமைப்பாளர் ஜாய் மகேஷ் பேசும்போது, தேர்வுகளை எளிதாக எழுதுவதற்கு மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிகாட்டுதல்களையும், எப்படி படித்தால் எளிதாக அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்பது குறித்தும் பேசினார். பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை மேலாளர் சிவராமன் கலந்து கொண்டு பேசும்போது, உயர்கல்வி பயில்வதற்கு வங்கிகள் மூலம் கடன் பெறும் வழிமுறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் அடையார் மற்றும் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ராணி மெய்யம்மை  மேல்நிலைப் பள்ளிகள்,லேடி வெலிங்டன் பள்ளி உட்பட ஆறு பள்ளிகளை சேர்ந்த 760 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும்  உயர் கல்வி படிப்பதற்கு வங்கி கடன் பெறுவதற்கான தகவல் கையேடு வழங்கப்பட்டது. கல்வி முன்னேற்றம் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் மற்றும் ‘பிளஸ் 1’ மற்றும் ‘பிளஸ் 2’ மாணவர்களின் கலந்துரையாடலும் நடந்தது. மெட்ராஸ் (தெற்கு) ரோட்டரி கிளப்பின் தலைவர் பவுனிக் மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் சிவகுமார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்