தலைமை ஆசிரியர் நியமனத்தை ரத்து செல்லும்: ஐகோர்ட்
சென்னை: ‘அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் தலைமையாசிரியர் நியமனத்தை அரசு ரத்து செய்தது செல்லும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் வெள்ளச்சாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி இது. பள்ளியின் தலைமை ஆசிரியராக கோபால் என்பவரை, பள்ளிக் குழு நியமித்தது. இதை எதிர்த்து அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கலைச் செல்வன், அரசுக்கு மனு அனுப்பினார். சீனியராகவும், தகுதி உள்ளவராகவும் உள்ள தன்னை நியமிக்க வேண்டும் என கோரினார். இதையடுத்து, கோபாலின் நியமனத்தை ரத்து செய்து பள்ளி கல்வித் துறைச் செயலர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் கோபால் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தனபாலன் பிறப்பித்த உத்தரவு:ஒரு ஆசிரியரின் தகுதி, திறமையை மதிப்பிட அவர் பெற்றுள்ள கல்வித் தகுதி, தொழில் தகுதி முக்கியம். பயிற்றுவிக்கும் பாடங்களுக்கு அப்பால் பெறும் மற்ற தகுதிகள் தேவையில்லை. தேவையான கல்வித் தகுதி மற்றும் பயிற்றுவிக்கும் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் இவற்றை வைத்து அந்த ஆசிரியரின் தகுதி, திறமையை மதிப்பிடலாம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் கோபால் மற்றும் கலைச்செல்வன் இருவருக்கும் தேவையான தகுதி உள்ளது. மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீதம் அடிப்படையில் தான், இவர்களின் தகுதி மற்றும் திறமையை கணக்கிட முடியும். மாணவர்களின் தேர்ச்சி தான் ஆசிரியர்களின் திறமையை பிரதிபலிக்கும் கண்ணாடி. ஆசிரியர் கலைச்செல்வனிடம் பயின்ற மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், தலைமையாசிரியர் பதவிக்கு போட்டியிட்டவர்களில், கலைச்செல்வன் தான் சீனியர். எனவே, அவருக்கு தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என அரசு சரியாக முடிவெடுத்துள்ளது. எந்த அதிகாரியின் ஆவணங்களையும் வரவழைத்து ஆராய அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, அரசு எடுத்த முடிவு சரிதான். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.