ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில் விவசாயி மகன் தேர்ச்சி
ஆமதாபாத்: ஐஐடி.,க்களில் சேர்வதற்காக நடந்த ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில், குஜராத்தை சேர்ந்த விவசாயி மகன் வெற்றி பெற்றுள்ளார்.ஆமதாபாத்தின் நவி அகோல் பகுதியை சேர்ந்த சிறு விவசாயியின் மகன் விஜய் மக்வானா. இவர் ஜேஇஇ அட்வான்ட்ஸ்டு தேர்வில், அகில இந்திய ரேங்க் பட்டியலில், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 1,849வது இடத்தை பிடித்துள்ளார். பொறியியலில் கம்ப்யூட்டர் அல்லது மெக்கானிக்கல் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பட்டமேற்படிப்பு படிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ள விஜய், அதற்கு முன்னதாக தனது குடும்பத்திற்கு உதவ வேலைக்கு செல்ல உள்ளதாக கூறினார்.அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரம் மட்டுமே. இது அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. இவரது மூத்த சகோதரர், குஜராத் அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், இந்தூஸ் பல்கலையில் எம்டெக் முடித்துள்ளார். விஜய்யும், தனது பள்ளிப்படிப்பை ஆமதாபாத்தை சேர்ந்த விஸ்மோ கிட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முடித்தார். ஜேஇஇ மெயின் தேர்வில், விஜய் 94,382வது இடத்தை பிடித்திருந்தார்.விஜய் மக்வானா கூறுகையில், 3 குழந்தைகளுக்கும் கல்வியை கொடுக்க எனது தந்தையிடம் போதிய பணம் இல்லை. இருப்பினும், வறுமையை விரட்ட கல்வி தான் ஒரே வழி என்பதை தெரிந்திருந்தார். ஐஐடியில் சேர வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்ற பெற்றோர்கள் கடுமையாக உழைத்தனர். தினசரி பாடங்களை படித்து முடித்த எனக்கு, பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் பெரிதும் உதவினர். அங்கு கொடுக்கப்பட்ட புத்தக குறிப்புகள், ஆன்லைன் தேர்வு பயிற்சி ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற முடிந்தது. பள்ளி தேர்வையும், ஜேஇஇ மெயின் தேர்வையும் ஒரே நேரத்தில் என்னால் சரியாக கையாள முடியவில்லை. இதனால், தான் மெயின் தேர்வில், மதிப்பெண் குறைந்தது என்றார்.கிரிக்கெட் வீரர் தோனியின் மிகப்பெரிய ரசிகரான விஜய் மேலும் கூறும்போது, கடினமான நேரங்களிலும் தோனியின் பொறுமை மற்றும் அவர் வெளிப்படுத்திய திறமை எனக்கு முன்மாதிரியாக இருந்தது. நான் பிளஸ் 2 தேர்வு மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த போதும், நான் பொறுமையாக இருந்து, கடுமையாக உழைத்து அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றேன்.நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும், எனது கிராமத்தில் நன்றாக படிக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி செய்வதும், நாட்டின் உயிரிய கல்வி நிறுவனங்களில் சேர விரும்புவர்களுக்கு வழிகாட்டுவதே எனது இலட்சியம் என்றார்.