இந்திய மருத்துவம், ஓமியோபதி கவுன்சிலிங் நாள் அறிவிப்பு
சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை சார்பில் நவ. 23ம் தேதி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில், நவ. 23ம் தேதி மாணவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் அமைந்துள்ள அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 50 இடங்களுக்கும், அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இதனால் ஏற்படும் காலி இடங்களுக்கும், ஏற்கனவே கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கவுன்சிலிங்கில் அளிக்கப்பட உள்ள இட ஒதுக்கீடு ஆணை மற்றும் புதுடில்லியில் உள்ள இந்திய மருத்துவ மைய கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான இறுதிநாள் நீட்டிப்பிற்கான ஆணையை பொறுத்து உறுதி செய்யப்படும். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற கலந்தாய்வில் இடஒதுக்கீடு ஆணை மற்ற மாணவர்கள், தங்களது உண்மை ஆளறிச் சான்றிதழ் மற்றும் உரிய கட்டணத்துடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.