செலவு செய்யத் தயங்கும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கென ஒவ்வொரு ஆண்டும், கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. கிராமப்புறத்தில் உள்ளவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவது ஆணையத்தின் நோக்கம். ஆணையத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள உடற்கல்வி ஆசிரியை, ஆசிரியர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, புதிய விளையாட்டுகள் குறித்து ஆறுவார பயிற்சி அளிக்கப்பட்டது.பஞ்சாப், பெங்களூரு, குஜராத், கொல்கத்தா, திருவனந்தபுரம், கர்நாடகாவில் பயிற்சி மையங்கள் உள்ளன. விளையாட்டைப் பொறுத்து, ஏதாவது ஒரு மையத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.மாவட்டத்தில் பத்து ஆசிரியர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வீதம், அனைத்து மாவட்டங்களிலும் தலா பத்து ஆசிரியர்களுக்கான செலவை ஆணையம் ஏற்றுக் கொண்டது. ஆறுவார காலம் அங்கேயே தங்கியிருந்து, விளையாட்டு நுணுக்கங்களை கற்று திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்பித்தனர். இதனால் மாணவர்கள் தாங்கள் விளையாடும் புதிய விளையாட்டைப் பற்றிய முழுமையான தகவல்களைத் அறிந்தனர். பயிற்சியைத் தவிர ஆசிரியர்களுக்கு, இதனால் வேறெந்த பயனும் இல்லை. 2004 - 2006 வரை, தொடர்ந்து மூன்றாண்டுகள் பல்வேறு ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.2006க்கு பிறகு, உடற்கல்வி ஆசிரியர்களை பயிற்சிக்கு அனுப்பும் பணியை ஆணையம் நிறுத்திவிட்டது. ஆனால் 2006க்கு பிறகு, ரோடு சைக்ளிங், பீச் வாலிபால், கேரம், செஸ், சிலம்பம் ஆகிய புதிய விளையாட்டுகள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இந்த விளையாட்டுகள் முழுமையாகத் தெரியவில்லை. இதனால் விளையாடும் மாணவர்களின் நிலை என்னாவது?வெளிமாநிலங்களுக்குச் சென்று ஆசிரியர்கள் கற்பதை வீண்செலவாக நினைத்தால், அதற்கான வசதிகளை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும். சென்னை நேரு ஸ்டேடியத்தில், அனைத்து விளையாட்டுகளுக்கான அரங்குகள் உள்ளன. பயிற்சியளிக்க கூடுதல் கட்டடம் அமைத்தால் மட்டும் போதும். ஆசிரியர்களுக்கு சென்னையிலேயே பயிற்சி அளிக்கலாம். செலவும் குறையும். அதுவரை ஆசிரியர்கள் வெளிமாநிலங்களில் பயிற்சிபெற ஆணையம் செலவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிகளில் புதிய விளையாட்டுகள் அறிமுகப்படுத்துவது வீணாகும்.