உள்ளூர் செய்திகள்

சமூக பிரச்னைகளை களையும் பொறுப்பு இளைஞர்களுக்கு உண்டு

கோவை: “சமூக பிரச்னைகளுக்கு எதிராக போராடி நாட்டை மீட்கும் முக்கிய பொறுப்பு இளைஞர்களுக்கு உண்டு,” என்று மத்திய தேர்வாணைய உறுப்பினர் பாலகுருசாமி கூறினார். கோவை பாரதியார் பல்கலையின் 25வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் உள்ள உஷா கீர்த்திலால் அரங்கில் நடந்தது. 47,496 பேர் பட்டம் பெற்றனர். தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பட்டங்களை வழங்கினார். விழாவில் மத்திய தேர்வாணைய உறுப்பினர் பாலகுருசாமி பேசியதாவது: பட்டம் பெறும் ஒவ்வொருவரும் பெற்றோர், ஆசிரியருக்கு மட்டுமல்லாமல் இந்த சமுதாயத்துக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். உயர்கல்வி வாய்ப்பு பெற முடியாத பலரின் கடின உழைப்பால் கிடைக்கும் பணத்தால்தான் உயர்கல்வி நிறுவனங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நன்றிக் கடனை திருப்பி செலுத்த வேண்டும். கல்வி தனி மனித வளர்ச்சிக்கு மட்டுமல்ல, சமூக, தேசிய மேம்பாட்டுக்கும் ஒரு சிறந்த கருவி. இதை இளைஞர்கள் புரிந்து கொண்டு சமுதாயத்துக்கு சேவை புரிய வேண்டும். பல்கலைகள் வழிகாட்ட வேண்டும். இன்று உலகின் நான்கு பொருளாதார வல்லரசு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அணுசக்தி திறன் உள்ள சில நாடுகளில் நம் நாடும் ஒன்று. சந்திரனில் தண்ணீர் உள்ளதை சந்திராயன் மூலம் கண்டு பிடித்த நாடு, நம் நாடு. இத்துடன் ஏராளமான இயற்கை வளமும் இருந்தபோதும், சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்னும் நாம் இன்னும் வளர்ந்த நாடாக மாறவில்லை. பொருளாதார ரீதியாக நாம் வலுவாக இருந்தாலும், சமூக ரீதியாக பலவீனமாகவே உள்ளோம். இந்தியாவில் 300 மில்லியன் மக்களுக்கு மேல் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். தினமும் 200 மில்லியன் மக்கள் பசியுடன் உறங்கச் செல்கின்றனர். 400 மில்லியன் மக்கள் படிப்பறிவில்லாமல் உள்ளனர். 70 சதவீத மக்களுக்கு சுகாதார வசதிகள் இல்லை. 30 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை. நகரங்களில் வசிக்கும் 50 சதவீத மக்கள் குடிசைப்பகுதியில் உள்ளனர். 40 மில்லியன் குழந்தைகள் அனாதைகள். 20 மில்லியன் தெருக்குழந்தைகள். 15 மில்லியன் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். ஆறு வயதுக்கு கீழ் உள்ள 46 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் தவிக்கின்றனர். வறுமை, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் ஒவ்வொரு ஆறு செகண்டுக்கு ஒரு குழந்தை இறக்கிறது. தண்ணீரால் பரவும் நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் ஏழு லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. முதியவர்களில் 10 மில்லியன் பேர் தனிமையில் வசிக்கின்றனர். பெருகி வரும் மக்கள் தொகை, வறுமை, மோசமான சுகாதார முறைகள், பயமுறுத்தும் காலநிலை மாற்றம், ஜாதி முறைகள், பெருகி வரும் தீவிரவாதம், சுருங்கி வரும் தண்ணீர் மற்றும் ஆற்றல் வளங்கள், அதிகரித்து வரும் வன்முறை, ஊழல் ஆகியவை இந்தியா சந்தித்து வரும் சமூக பிரச்னைகள். இப்பிரச்னைகளில் இருந்து நம் நாட்டை இளைஞர்கள் மீட்க வேண்டும். நாடு சந்தித்து வரும் சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தும் சமூகநலத் திட்டங்களின் பயன்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களை சென்றடைவதில்லை. ஊழல்தான் இதற்கு காரணம். ஊழலு<க்கு எதிரான சட்டங்கள் இருந்தும் பல்வேறு காரணங்களால் பலன் அளிப்பதில்லை. ஊழலுக்கு எதிராக வெற்றி பெற சமூக மாற்றம் நிகழ வேண்டும். மக்கள் தொகையில் 40 சதவீத பங்கு வகிக்கும் இளைஞர்களின் கைகளில்தான் இப்பிரச்னைகளுக்கான தீர்வு உள்ளது. ஊழலுக்கு எதிராக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு, பாலகுருசாமி பேசினார். அவருக்குப் பின் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “பாலகுருசாமி எப்போதும் நெகட்டிவ் ஆகவே பேசுபவர். அவர் கூறுவது போல் அப்படியொன்றும் நாடு மோசமாகி விட வில்லை. நம் நாடு சிறப்பாக முன்னேறியுள்ளது,” என சப்பைக் கட்டு கட்டினார். புள்ளி விபரங்கள் சகிதம் சமூக அக்கறையுடன் வெளிப்பட்ட பாலகுருசாமியின் பேச்சால் கவரப்பட்டிருந்த பார்வையாளர்கள், அவருக்குப் பின் மேடையிலேயே அவரை குறை கூறிய அமைச்சர் பொன்முடியின் பேச்சால் முகம் சுளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்