மதுரை காமராஜ் பல்கலைக்கு மார்ச்சில் விரிவுரையாளர் நியமனம்
மதுரை: “மதுரை காமராஜ் பல்கலையில் வருகிற மார்ச்சில் விரிவுரையாளர், அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்”, என துணைவேந்தர் கற்பககுமாரவேல் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் வருகிற ஜூன் மாதம் நடக்க உள்ள செம்மொழி மாநாட்டில் மதுரை காமராஜ் பல்கலையும் பெரியளவில் பங்களிப்பு செய்ய உள்ளது. மாநாட்டுக்கு வரும் மலேசிய தமிழறிஞர்கள், சான்றோர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதுடன், பல்கலை பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இதில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பர். பல்கலை காலியிடங்களில் 103 விரிவுரையாளர்கள், 9 பேராசிரியர்கள், 89 அலுவலர்கள் நியமிக்க சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு வருகிற ஜனவரியில் வெளியிட்டு, பிப்ரவரியில் நேர்முகத் தேர்வு நடத்தி, மார்ச்சில் நியமனம் செய்யப்படுவர். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். பத்தாண்டுக்கு மேலான தொகுப்பூதிய பணியாளர், நான்காம் நிலை பணியாளர்களில் பட்டம் பெற்றோர் ஆகியோருக்கு எழுத்துத் தேர்வில்பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். பின்பு பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், கூடுதல் அலுவலர், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர், சிறப்பு அலுவலர், தொலைநிலை கல்வி இயக்குனர் போன்ற நிர்வாக பணியிடங்களும் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும். இப்பல்கலையில் மலேசிய எழுத்தாளருக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது. பிப்ரவரி முதல்வாரம் காமன்வெல்த் ஆப் லேர்னிங் மற்றும் மதுரை காமராஜ் பல்கலை இணைந்து பல்ஊடக கற்றல் பொருளின் தரத்தை நிர்ணயம் செய்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்க உள்ளது. இதில் 15 நாட்டு அறிஞர்கள் பங்கேற்க உள்ளனர். பல்கலையின் உயிரியல் துறைக்கு இரண்டு கோடி ரூபாய், இயற்பியல் துறைக்கு 90 லட்சம், ஸ்கூல் ஆப் ரிலிஜியன் துறைக்கு 46 லட்சம் நிதி கிடைத்துள்ளது. மலேசிய தமிழ் ஆய்வு இருக்கை துவக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான நிதி விரைவில் கிடைக்கும். பல்கலை முழுவதும் பசுமையாக இருக்கும் வகையில் ‘கோ கிரீன்’ திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இந்தியாவில் முதன்முறையாக நிர்வாக பணியாளர் மேம்பாட்டுக்கான கல்லுõரி அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளது, என்றார்.