உள்ளூர் செய்திகள்

அகில இந்திய குவிஸ் போட்டி: ஆர்.பி.ஐ., அறிவிப்பு

பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:மாணவர்களிடையே நிதி சார் கல்வியறிவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி அகில இந்திய அளவில் வினாடி- வினா போட்டியை நடத்த உள்ளது. இதில் 8 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வினாடி- வினா போட்டியில் ஆர்.பி.ஐ., இணையதளத்தில் இடம் பெற்றுள்ள நிதிசார் கல்வி தொடர்பான விவரங்கள், வங்கிகள், பொருளாதாரம் தொடர்பான தற்போதைய நிகழ்வுகள், ஜி20 மாநாடு ஆகியவற்றின் அடிப்படையில் போட்டிக்கான வினாக்கள் இடம் பெறும்.போட்டியில் ஆர்வமுள்ள ஒரு மாணவர், ஒரு மாணவியை தேர்வு செய்து இரு நபர் அடங்கிய குழுவினை வட்டார அளவிலான போட்டிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் பரிந்துரை செய்ய வேண்டும்.வட்டார அளவிலான போட்டிகள் ஜூலை 3 முதல் 5ம் தேதிக்குள் நடத்திட வேண்டும். மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), வட்டார கல்வி அலுவலர்கள், ஆர்.பி.ஐ., அதிகாரிகளுடன் இணைந்து இப்போட்டிகளை நடத்திட வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகள் ஜூலை 10 முதல் 12 ம் தேதிவரை நடத்தப்படவுள்ளது. இதற்கு வங்கி மேலாளர்களுடன் இணைந்து முதன்மை கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலக பள்ளி துணை ஆய்வாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாநில, அகில இந்திய போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்