புதிய பொது பாடத்திட்டம்: கல்லூரிகளே முடிவு செய்யலாம்
அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:மாணவர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தவும், தொழில் துறை தேவைகளை பூர்த்தி செய்யவும், உயர் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டம் மறு சீரமைக்கப்பட்டு, பொது பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மாநிலத்தில் உள்ள, 90 சதவீத அரசு உயர் கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரியின் தன்மைக்கேற்ப, சில மாற்றங்களுடன், பொது பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளன. இந்த பாடத்திட்டத்தின் நோக்கத்தை விளக்க, கடந்த 2ம் தேதி, சென்னை அண்ணா பல்கலையில், அனைத்து தன்னாட்சி கல்லுாரி முதல்வர்களுடன், கலந்தாய்வு கூட்டம் நடந்தது; அமைச்சர் பொன்முடி தலைமை வகித்தார்.கூட்டத்தில், புதிய மாதிரி பாடத்திட்டம், 70 சதவீத தன்னாட்சிக் கல்லுாரிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சில தன்னாட்சி கல்லுாரிகளில், தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், பொது பாடத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதால், கல்லுாரி தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டது. தன்னாட்சி கல்லுாரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், கவனமுடன் பரிசீலிக்கப்பட்டன. அதன்படி தன்னாட்சி கல்லுாரிகள், புதிய மாதிரி பாடத்திட்டத்தை, தங்கள் கல்லுாரிகளில் நடைமுறைப்படுத்துவது குறித்து, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, முடிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.