உள்ளூர் செய்திகள்

என்.ஐ.டி., ஆசிரியர் நியமனம் ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

திருச்சி: என்.ஐ.டி., ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.திருச்சி என்.ஐ.டி.,ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் உட்பட சிலர் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் நாட்டில் 31 தேசிய தொழில்நுட்ப கழகங்கள் (என்.ஐ.டி.,க்கள்) செயல்படுகின்றன. இதில் திருச்சி என்.ஐ.டி., முதலிடத்தில் உள்ளது. இங்கு இயக்குனர், துணை இயக்குனர், பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள் உள்ளன. என்.ஐ.டி.,க்களில் பணி நியமனம், பதவி உயர்வு என்.ஐ.டி., சட்டத்திற்குட்பட்டது. இதில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் என்.ஐ.டி.,யின் ஆட்சிக்குழு விவாதித்து முடிவெடுக்கும். இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும். இது என்.ஐ.டி.,யின் நிர்வாக நடைமுறை. இதனடிப்படையில் என்.ஐ.டி.,யின் பணி நியமனம், பதவி உயர்வு மேற்கொள்ளப்படும்.ஒரு பணி நிலையிலுள்ள ஆசிரியர் அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெற முடியும். பதவி உயர்வு நடைமுறையை பின்பற்றாமல் அந்தந்த பதவிகளுக்குரிய தகுதிக்கேற்ப நேரடி நியமனம் மேற்கொள்ளலாம் என மத்திய கல்வித்துறை சார்பு செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டார். இதனடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள திருச்சி என்.ஐ.டி., அறிவிப்பு வெளியிட்டது. இது என்.ஐ.டி.,சட்டத்திற்கு எதிரானது. நேரடி நியமனம் தொடர்பான சுற்றறிக்கை மற்றும் பணி நியமன அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். சட்டப்படி நியமனம், பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர். நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: சட்டத்தை பின்பற்றாமல் மாற்று நடவடிக்கை மேற்கொள்ளும்போது ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவது அவசியம். இதை பின்பற்றாமல் நேரடி நியமனம் மேற்கொள்வது ஏற்கனவே பணியிலுள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் பெறுவதை பாதிக்கும் என தெரிவித்தது. நீதிபதி: நேரடி நியமனம் தொடர்பான சுற்றறிக்கை என்.ஐ.டி., சட்டத்திற்கு புறம்பானது. அது ரத்து செய்யப்படுகிறது. உதவி பேராசிரியர் (2) பணிநிலையை தவிர மற்ற அனைத்து பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்