புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:கரூர் புத்தக திருவிழா அரசு விழாவாக வரும் அக்., 6 முதல், 16 வரை 11 நாட்கள் நடக்கிறது. கடந்தாண்டு போலவே இந்தாண்டும், 100 அரங்குகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு அமைக்கப்பட வேண்டும், காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை புத்தக திருவிழா நடக்கக்கூடிய அளவிற்கு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.குறிப்பாக மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், மாலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை கருத்தரங்கம், பட்டிமன்றம், சிந்தனை சொற்பொழிவு உள்ளடக்கிய சான்றோர்கள், பெரியோர்கள் பங்கு பெறக்கூடிய வகையில் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடுகள் செய்திட வேண்டும். ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளை புத்தக திருவிழாவில் பங்கு கொள்வதற்கான பஸ் வசதி, குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.