கல்லூரிகளில் அதிரடி ‘ரெய்டு’ : பாரதியார் பல்கலை
கோவை: உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரும் ஆராய்ச்சியாளர்கள், விருந்தினர்களுக்கு வழிகாட்டவும் ஒருங்கிணைக்கவும், பாரதியார் பல்கலையில் படிக்கும் ஆயிரம் முதுகலை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் நடைபெறவுள்ள தமிழ் செம்மொழி மாநாட்டில் நடைபெறவுள்ள ஆய்வரங்கம் தொடர்பாக, பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் அனைத்துக் கல்லூரி தமிழ் ஆசிரியர்களின் கூட்டம் ஜன. 28ல் நடத்தப்படவுள்ளது. மாநாட்டு ஊர்வலத்தின் கருப்பொருள் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தமிழக முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டினர், ஆராய்ச்சியாளர்களுக்கு தங்குமிடம், ஓட்டல், மாநாட்டு நிகழ்விடங்களை வழிகாட்டவும் ஒருங்கிணைக்கவும், பாரதியார் பல்கலை, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரம் முதுகலை மாணவர்களை தேர்வு செய்யவுள்ளோம். விருந்தினர்களை பக்குவமாக கையாள்வது, அவர்களுடன் தகவல்களை பரிமாறிக் கொள்வது, தேவையான உதவிகளை செய்வது பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளில் ரெய்டு: பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை பார்வையிட, மூன்று சிண்டிக்கேட் உறுப்பினர்களைக் கொண்ட தனி ‘பறக்கும் படை’ அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு முன்கூட்டி தகவல் தராமல் இக்குழுவினர் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு நடத்துவர். உள்கட்டமைப்பு, தகுதியான ஆசிரியர், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் குறைந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். பின் பல்கலையுடன் இணைப்பு ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் இந்தியா முழுவதும் அங்கீகார ரத்து நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள நிகர்நிலை பல்கலைகளுக்கு ஏற்பட்ட கதி, இக்கல்லூரிகளுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதால், கல்லூரி நிர்வாகங்கள் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயிற்சி: கோவை, திருப்பூர், நாமக்கல் பகுதிகள் உட்கொண்ட கொங்கு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து வழிகாட்ட, பாரதியார் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் துவங்கப்படுகிறது. பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரம் முதல் வகுப்புகள் துவங்கும். முதல் கட்டமாக நுழைவுத் தேர்வு மூலம் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இத்துறையில் சிறந்த பயிற்சி பெற்ற பேராசிரியர்கள், சப் கலெக்டர்கள், பயிற்சி கலெக்டர்கள் வகுப்புகளை கையாள்வர். இவ்வாறு, துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார்.