உள்ளூர் செய்திகள்

ஆன்சர் கீ கோரிய வழக்கு டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவு

மதுரை: தமிழகத்தில் நடந்த, குரூப் - 4 தேர்வு விடைத்தாள் நகல் என்ற, ஆன்சர் கீ வழங்க கோரிய வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த கண்மணி, கீதா ஆகியோர் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 2022 மார்ச் 30ல், குரூப் - 4 தேர்வு அறிவிப்பு வெளியானது. மொத்தம், 7,301 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு, ஜூலை, 24ல் எழுத்து தேர்வு நடந்தது. 22 லட்சம் பேர் விண்ணப்பித்து, 18 லட்சம் பேர் எழுதினர். இதன் பின் காலியிடங்கள் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.தேர்வு முடிவுகள் மார்ச்சில் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. நாங்கள், 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, எங்களுக்கு, ஆன்சர் கீ நகல் வழங்க வேண்டும். அதுவரை எங்களுக்குரிய பணியிடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.இம்மனு, நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி, குரூப் - 4 தேர்வுக்கான இறுதி, ஆன்சர் கீ வெளியிடப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். மேலும், வெளியிடவில்லை என்றால் உடனே வெளியிட வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்