நம்ம மெட்ரோவில் பின்புறமாக குதித்த மாணவருக்கு அபராதம்
பெங்களூரு: நம்ம மெட்ரோவில், பேக் பிலிப் ஸ்டன்ட் எனும் பின்புறமாக துள்ளிக்குதித்த மாணவருக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் 500 ரூபாய் அபராதம் விதித்தது.பெங்களூரு மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் சொகுசான பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக, அதன் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவற்றை மீறுவோரிடம் இருந்து விதிகளின்படி அபராதம் வசூலிக்கிறது.இந்த வகையில் சமீபத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஒரு இளைஞர், ரயில் பெட்டியின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு, பின்புறமாக துள்ளிக் குதித்தார். அதை அவரது நண்பர், வீடியோ எடுத்தார். இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த மெட்ரோ ரயில் ஊழியர், அடுத்து வந்த எலச்சனஹள்ளி மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.இந்த ரயில் அங்கு நின்றதும், சம்பந்தப்பட்ட பெட்டிக்குள் வந்த ரயில் நிலைய அதிகாரிகள், ரயில் பெட்டிக்குள் துள்ளிக்குதித்த இளைஞரையும் அதை வீடியோ எடுத்த இளைஞரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் மாணவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களை எச்சரித்த அதிகாரிகள், துள்ளிக்குதித்த மாணவரிடம் இருந்து விதிகளை மீறியதற்காக 500 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.