மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா: அமைச்சர் மூர்த்தி தகவல்
மதுரை: கலைத் திருவிழா மாநில போட்டியில் முதன்மை பெறும் மாணவர்களில் 25 பேர் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.பள்ளிக் கல்வித்துறை சார்பில் மதுரை யாதவா பெண்கள் கல்லுாரியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி நடந்தது. துவக்கி வைத்து அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: 6 -12ம் வகுப்பு மாணவர்களுக்கு 190 வகை போட்டிகள் நடத்த படுகின்றன. மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோர் மாநில போட்டியில் பங்கேற்பர். மாநில போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். தனிப் போட்டியில் அதிக போட்டிகளில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் விருது, மாணவிக்கு கலையரசி விருது வழங்கப்படும்.மாநில அளவில் முதன்மைபெறும் 25 பேர் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். போட்டி மூலம் மாணவர்களுக்கு தமிழர்களின் கலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும், என்றார்.திருவாதவூர் அரசு பள்ளி விழாவில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான உதவிகளை அமைச்சர் வழங்கினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் பங்கேற்றனர்.