அரசு பள்ளியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
உடுமலை: பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பள்ளி நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் உடுமலை வட்டார பொது சுகாதாரத்துறை இணைந்து நிகழ்ச்சியை நடத்தினர். பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் ஜெகநாதன் ஆழ்வார்சாமி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர்கள் முருகன், தினேஷ் முன்னிலை வகித்தனர்.எரிசனம்பட்டி சித்த மருத்துவர் கார்த்திகேயன், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சமூகப்பணியாளர் பிரவீன், போதைபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து பேசினார்.காய்ச்சல் வகைகள் மற்றும் அவை பரவும் வழிமுறை குறித்து, மாவட்ட மலேரியா தடுப்பு துறை அலுவலர் காசிம்முஸ்தபா விளக்கமளித்தார். நலக்கல்வி அலுவலர் ராஜ்குமார், உடல் நலனும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் பேசினார். பெண் குழந்தைகள் உடல் நலம் குறித்து, டாக்டர் ஜெயஸ்ரீ மாணவியருடன் கலந்துரையாடி அவர்களுக்கு பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோனை நன்றி தெரிவித்தார்.