வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் தடுப்பணையில் ஆபத்து குளியல்
பொன்னேரி: பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் - கன்னியம்பாளையம் இடையே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்துள்ளது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தடுப்பணை நிரம்பி வழிகிறது.தடுப்பணையில் இருந்து ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரில், கிராமவாசிகள் அங்கு கூடி பார்வையிடுவதுடன், ஒரு சிலர் மீன் பிடித்தும் வருகின்றனர்.இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள், தடுப்பணை பகுதியில் குவிந்து வருகின்றனர். அவர்கள், பள்ளி வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, தடுப்பணையில் ஆபத்தான முறையில் குளித்து விளையாடுகின்றனர்.தடுப்பணையின் பக்கவாட்டு பகுதியில் உள்ள, 20 அடி உயர கான்கிரீட் சுவர் மீதிருந்து, ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரில் குதிப்பது, டைவ் அடிப்பது, ஆற்றில் ஆழமான பகுதிக்கு நீச்சலடித்து சென்று திரும்புவது என, ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர்.இதனால் அங்கு அசம்பாவிதங்கள் நேரிடும் வாய்ப்பு உருவாகி உள்ளது. அதை தவிர்க்க, வன்னிப்பாக்கம், கன்னியம்பாளையம் பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தி, எச்சரிக்கை செய்திடவும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில், ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.