எடுபிடி வேலைக்கு மாணவர்களா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விவகாரம்
கோவை: ஆலாந்துறை நடுநிலைப்பள்ளியில், தேன்கூட்டை அழிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட, ஏழாம் வகுப்பு மாணவனுக்கு, தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட விவகாரம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆலாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் அறைக்கு வெளியே, தேன்கூடு இருந்துள்ளது. இதை அகற்ற, ஏழாம் வகுப்பை சேர்ந்த மூன்று மாணவர்களை, தலைமையாசிரியர் பழனிச்சாமி, நேற்று முன்தினம் ஈடுபடுத்தினார். குச்சியில் துணி கட்டி, தீ உருவாக்க, சானிடைசர் பயன்படுத்தியதால் தீ பரவி, மாணவர் சந்துரு உடலில் காயம் ஏற்பட்டது. அடிவயிறு, தொடை பகுதிகளில் தீக்காயம் இருப்பதால், அரசு மருத்துவமனையில் இருந்து, பெற்றோர் கோரிக்கை அடிப்படையில், தனியார் மருத்துவமனைக்கு மாணவர் மாற்றப்பட்டுள்ளார். பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாளிடம் கேட்டபோது, மாணவர்களின் பாதுகாப்பு தான் முதன்மையானது. இதை கண்காணிக்கும் பொறுப்பு, பள்ளி அளவில் தலைமையாசிரியர்கள் கையில் தான் உள்ளது. பள்ளி நேரத்தில் இதுபோன்ற செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாதென வலியுறுத்தி வருகிறோம். ஆலாந்துறை பள்ளி தலைமையாசிரியர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் செயல்பாடுகள், இனி நடக்கவே கூடாதென்பதை, வட்டார கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும், என்றார்.