அண்ணா, சென்னை பல்கலைகளில் செமஸ்டர் தேர்வு துவக்கம்
சென்னை: புயல் பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட, கல்லுாரி தேர்வுகள் இன்று மீண்டும் துவங்கின.சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால், சென்னை பல்கலை இணைப்பில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வுகள், 4ம் தேதி முதல் தள்ளி வைக்கப்பட்டன.தற்போது நிலைமை சீராகி வரும் நிலையில், அனைத்து கல்லுாரிகளிலும், செமஸ்டர் தேர்வுகளை முறையாக நடத்தும்படி, பல்கலைகள் கேட்டுக் கொண்டுள்ளன. இதையடுத்து, இன்று முதல் மீண்டும் செமஸ்டர் தேர்வுகள் துவங்கஉள்ளன.முன்னதாக, கல்லுாரிகள் திறப்புக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் சீரமைப்பு பணிகளை, சென்னையில் உள்ள அரசு கல்லுாரிகளில், தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி நேற்று பார்வையிட்டார்.அப்போது, மாணவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க, போர்க்கால அடிப்படையில் பணிகள் நடப்பதாக தெரிவித்தார்.