பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சியில் சேர அழைப்பு
கோவை: நாட்டுப்புறக் கலைகளை மேம்படுத்துவதற்காக, பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையங்களை, தமிழக அரசு தோற்றுவித்திருக்கிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லுாரியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை, துடும்பாட்டம், ஜிக்காட்டம், வள்ளிக்கும்மி, காவடியாட்டம் போன்ற கலைகளை பயில்வதற்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பு துவங்க இருக்கிறது.இக்கலை பயிற்சி படிப்புகளில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், 17 வயதுக்கு மேல் வயது வரம்பு இல்லை. இதற்கான கல்வி கட்டணம் ரூ.500 பெறப்படுகிறது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலை மூலம் கலை பயிற்சிக்கான தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பங்களை, மலுமிச்சம்பட்டியில் செயல்படும் இசை கல்லுாரியில் பெற்று, விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 90805 78408, 0422 - 2611 196 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.