தேசிய சிந்தனையுள்ள பத்திரிகையாளர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவை
சென்னை: தேசிய ஊடகவியலாளர்கள் நலச்சங்கம் நடத்தும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஜர்னலிசம் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.இதில், தெலுங்கானா கவர்னரும் புதுச்சேரி துணை நிலை கவர்னருமான தமிழிசை பங்கேற்று, மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, மூத்த பத்திரிக்கையாளர்களையும் கவுரவித்தார். இந்த நிகழ்வில், கொடைக்கானல் சின்மயா மிஷன் தலைவர் சுவாமி அக் ஷரானந்தா, மூத்த பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன், தேசிய ஊடகவியலாளர்கள் நலச்சங்க நிறுவன பொது செயலர் ஜெய கிருஷ்ணன், தினமலர் நாளிதழ் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி ஆகியோர் பங்கேற்றனர்.தினமலர் நாளிதழ் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது:நம் ஊரில் தேசிய சிந்தனை உடைய முதல் பத்திரிகையாளர் மகாகவி பாரதியார். எவ்வளவு ஏழ்மையாக இருந்தாலும், விடாமல் பத்திரிகையை நடத்தி வந்தார். அத்துடன், மற்ற பத்திரிகைகளுக்கு உதவியும் செய்து வந்தார்.அதேபோல், இன்னொரு தேசியவாதி எனது கொள்ளு தாத்தா ராமசுப்பையர். &'திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து நாஞ்சில் நாடு தமிழகத்தில் இணைய வேண்டும்&' என, பத்திரிகை துவங்கி, பல பிரச்னைகளை எழுதி போராடி, அதில் வெற்றியும் பெற்றார்.அக்காலத்தில் காஷ்மீரில் இருந்து நெல்லை வரைக்கும் மட்டுமே ரயில் சேவை இருந்தது. அதை கன்னியாகுமரி வரை இணைக்க வேண்டும் என, எழுதி போராடி வெற்றி கண்டார்.இதேபோல், தேசிய சிந்தனை உள்ள பத்திரிகையாளர்கள் தான் நமது நாட்டின், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பக்கபலமாக இருப்பர். அந்த வகையில், தற்போது பயிற்சி பெற்ற மாணவர்களும் செயல்பட வேண்டும். நீங்கள் ஊடகவியலாளர்களாக வெளியே வரும் போது, உங்களுக்கு போட்டியாக செயற்கை நுண்ணறிவாக இருக்கக்கூடும்.இச்சங்கம் பொன் விழா கொண்டாடுவதுடன், இன்னும் நிறைய தேசிய சிந்தனை உள்ள மாணவர்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வில், கவர்னர் தமிழிசை பேசியதாவது:பத்திரிகை சகோதரர்களை நேர்மையாளர்களாகவும், மிகவும் சிரமப்பட்டு செய்திகளை சேகரிப்பவர்களாகவும் பார்த்துள்ளேன். தற்போது, பத்திரிக்கையாளர் சந்திப்பு தேசியத்தை விட்டு சற்று நழுவுகிறதோ என்ற எண்ணம் உள்ளது.சில நேரங்களில் கலகலப்பாக இருக்க வேண்டிய பத்திரிகையாளர்கள் சந்திப்பு கைகலப்பாகும் அளவிற்கு மாறி விடுகிறது. இதை பத்திரிகையாளர்களும், அரசியல் தலைவர்களும் தவிர்க்க வேண்டும். பிரேக்கிங் நியூசில் கவனம் செலுத்துவதை விட, மேக்கிங் நியூசில் கவனம் செலுத்த வேண்டும்.தினமலர் நாளிதழ் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி, மிக நல்ல கருத்தை கூறினார். அவரது கொள்ளு தாத்தா தினமலர் நிறுவனர் ராமசுப்பையர், பத்திரிகையில் எழுதி கன்னியாகுமரி வரை ரயில் சேவை கொண்டு வந்ததாக கூறினார். கன்னியாகுமரி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்ட போது, அப்போது எம்.பி.,யாக இருந்த எனது தந்தை குமரி ஆனந்தன் மற்றும் அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் மது தாண்டாவதே ஆகியோர், அதில் பயணம் செய்ததை எனக்கு நினைவுபடுத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.இதில், மூத்த பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது :தினமலர் நாளிதழ் இணை இயக்குனர் ஆர். லட்சுமிபதி, பாரதியாரை நினைவுப்படுத்தி மிக அழகான சிற்றுரையை வழங்கினார். இங்குள்ள எதிர்கால பத்திரிக்கையாளர்களுக்கு நினைவூட்ட பட வேண்டிய பத்திரிக்கையாளர் பெயர் பாரதியார்.பாரதியாரின் சொல் ஒவ்வொன்றும் மந்திர சொல். அதற்கு மிக ஆழமான அர்த்தங்கள் உண்டு. ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் என, கூறியுள்ளார். அவர் நல்ல காகிதம் என்பது பத்திரிகையை.ஆபாச சொற்கள் இன்றி, அக்கப்போர் விஷயங்கள் இன்றி, தனிமனிதனையும் நாட்டையும் மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வாழ்த்து வெண்பா பெற்ற பெருமை தினமலர் நாளிதழுக்கு உரியது. இவ்வாறு உயர்ந்த சிந்தனைகளை தாங்கிய, மிக சிறந்த பத்திரிக்கையாளர்கள் உருவாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பெண்களை பலப்படுத்த வேண்டும்நிழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது: ராணுவம், காவல் துறை உள்ளிட்ட கடுமையான பணிகளிலும் பெண்கள் ஈடுபடுகின்றனர். மாதவிடாய் காலங்களில் பெண்கள் பலத்துடன் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு தேவையில்லை என்பது தான் ஒரு கவர்னராக மட்டுமல்லாது, மருத்துவராகவும் எனது கருத்து. மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பது இயற்கையை குறிப்பிட்டு அவர்களை தனிமைப்படுத்துவது போன்றது. அத்தகைய சூழலில் இருந்து, தற்போது தான் வெளிவந்துள்ளோம். மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பதை பெண்களே விரும்ப மாட்டார்கள். அவ்வாறு அவர் கூறினார்.