உள்ளூர் செய்திகள்

அஞ்சல் அட்டை வாயிலாக வாழ்த்து: மாணவர்கள் ஆர்வம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி பள்ளி மாணவர்கள், கவிஞர்கள், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருக்கு அஞ்சல் அட்டை வாயிலாக, புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.மொபைல் போன் கலாசாரம் அதிகரித்து வரும் சூழலில், கடிதம் எழுதுவது எவ்வாறு என்பதையே மறந்து விடுகின்றனர். நலம் நலமறிய ஆவல் என எழுதி அனுப்பப்படும் கடிதங்கள், பொக்கிஷமாக பார்க்கப்பட்டன.நாகரிக உலகில், அழிந்து வரும் கடிதம் எழுதுதல் பழக்கத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்யும் வகையில், ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், கடிதம் எழுதி அனுப்புகின்றனர்.பொள்ளாச்சி இலக்கிய வட்ட கவிஞர்களான பூபாலன் அம்சபிரியா அன்றிலன் ஆகியோரின், சமுதாய அக்கறையுள்ள கவிதை புத்தகங்களை, 10 மாணவர்கள் படித்து அஞ்சல் அட்டை வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.மேலும், தேசியபசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரனுக்கும், தெப்பக்குளம் பணி, விதைபந்து, மரக்கன்று இலவசமாக வழங்குதல், மஞ்சப்பை பயன்படுத்தல், நெகிழி ஒழிப்பு, பறவைகளுக்கு நீர் வைத்து பாதுகாப்பு போன்ற அவரது பணியை பாராட்டி கடிதம் எழுதி புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.மாணவர்கள் தர்ஷினி, அனுபிரியா, சஞ்சய் விக்னேஷ், இமயபாரதி, கார்த்தி விசாலினி, தன்யா, சுதஸ்ரீ ஆகியோர் பள்ளி விடுமுறையில் மாணவர்கள், ஆசிரியர் கீதாவின் உதவியோடு அஞ்சல் அட்டை வாயிலாக வாழ்த்து மடல்களை அனுப்பும் பணியை மேற்கொண்டனர்.ஏரிப்பட்டி பள்ளி ஆசிரியை கீதா கூறுகையில், கடிதம் எழுதுவதன் வாயிலாக, மாணவர்கள் வாசித்தல், கவிதைகளை புரிந்து கொள்ளல், கையெழுத்து அழகுபெறுதல், இயற்கை நேசிப்பு தானும் கவிதையெழுத முயற்சி செய்தல் என பன்முகத்திறன்களை பெற முடியும். இதை மாணவர்கள் ஆர்வமாக எழுதி அனுப்பி உள்ளனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்