பொதுத்தேர்வு வெற்றி விளம்பர பேனர் வைக்க தடை
பந்தலுார்: பொது இடங்களில், கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் மதிப்பெண்களுடன் கூடிய விளம்பர பேனர்கள் வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், முதல் மூன்று இடங்கள் மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற, மாணவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பேனர்கள் வைக்க ஏற்கனவே, பள்ளி கல்வித்துறை தடை விதித்து உள்ளது. இது போன்ற பேனர்கள் வைப்பதால் சம்பந்தப்பட்ட பள்ளியில் படித்த, பிற மாணவர்களின் மனது பாதிக்கப்படும் என்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது வெளியான பொதுத் தேர்வு முடிவுகளில், முதல் மூன்று மற்றும் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களுடன் கூடிய, விளம்பர பேனர்கள் எந்தவித அனுமதியும் இன்றி பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்டு உள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், இதுபோன்று கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயர்கள் மற்றும் மதிப்பெண்கள் குறித்த விபரங்கள் அந்தந்த பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் மட்டுமே ஒட்ட வேண்டும். மாறாக, பொது இடங்களில் மதிப்பெண்களுடன் கூடிய விளம்பர பேனர்கள் வைக்க கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.