உள்ளூர் செய்திகள்

பசுமை சைக்கிளத்தான்! தினமலர் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் குறைந்தளவு துாரங்களுக்கு, கார், பைக் போன்றவற்றை பயன்படுத்தாமல், சைக்கிள் பயன்படுத்தினால், உடலுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் நல்லது, என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தினமலர் நாளிதழ் சார்பில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் நேரு கல்விக்குழுமத்துடன் இணைந்து, கோவை மாநகர காவல் துறை ஒத்துழைப்புடன், கோவையில் பசுமை சைக்கிளத்தான் நிகழ்ச்சி நேற்று நடந்தது.வாலாங்குளம் சுங்கம் பை-பாஸ் பகுதியில், நிகழ்ச்சியை துவக்கி வைத்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:சுற்றுச்சூழலுக்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பொதுவாக, கார், பைக் போன்ற வாகனங்கள் பயன்படுத்துவோர், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சைக்கிள் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக, பசுமை சைக்கிளத்தான் இருக்கிறது.சைக்கிள் ஓட்டுவதால் எரிபொருள் சிக்கனம், சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை குறைத்தல், உடலுக்கு ஆரோக்கியம் என பல பயன்கள் உள்ளன.இவற்றை ஒருங்கிணைக்கும் வகையிலான இந்நிகழ்ச்சி, முக்கியத்துவம் வாய்ந்தது. இதை பார்க்கக் கூடிய பொதுமக்கள், முடிந்தளவு சைக்கிள் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் குறைந்தளவு துாரங்களுக்கு, கார், பைக் போன்றவற்றை பயன்படுத்தாமல், சைக்கிள் பயன்படுத்தினால், உடலுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் நல்லது.இவ்வாறு, அவர்பேசினார்.நேரு கல்விக்குழுமத்தின் மக்கள் தொடர்பு இயக்குனர் முரளி உட்பட பலர் பங்கேற்றனர். சுங்கம், நிர்மலா கல்லுாரி, ரெட்பீல்ட்ஸ், ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டப்பாதை வழியாக தாமஸ் பார்க் அடைந்தது. 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கோட்ட மேலாளர் தீபக்குமார், ரீடெய்ல் மேனேஜர் பிரேமலதா ஆகியோர், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன், பங்கேற்பாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.போக்குவரத்து ஏற்பாடுகளை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், எஸ்.ஐ., கார்த்திக் உட்பட போலீசார் மேற்கொண்டனர்.சைக்கிளத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதற்கு போத்தீஸ் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்