ஹிஜாப் அணிய தடை பேராசிரியை ராஜினாமா
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பணி நேரத்தின்போது ஹிஜாப் அணிவதை தவிர்க்கும்படி, கல்லுாரி நிர்வாகம் அறிவுறுத்தியதால், பேராசிரியை ஒருவர் ராஜினாமா செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.மேற்கு வங்கத்தில் வர்த்தமான் மாவட்டத்தின் பூனியாவில் எல்.ஜே.டி., என்ற தனியார் சட்டக் கல்லுாரி உள்ளது. இங்கு சஞ்சிதா காதர் என்ற முஸ்லிம் பெண், பேராசிரியையாக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர், கல்லுாரிக்கு செல்லும்போது ஹிஜாப் அணிந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், கடந்த மே 31ம் தேதிக்கு பின் பணிக்கு வரும்போது ஹிஜாப் அணிவதை தவிர்க்குமாறு கல்லுாரி நிர்வாகம் சஞ்சிதாவிடம் அறிவுறுத்தியது. இது, அவருக்கு மத ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியதால் தன் பதவியை ராஜினாமா செய்தார்.இதற்கிடையே, கல்லுாரி நிர்வாகத்தின் இந்த கட்டுப்பாடு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இது, பலரின் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளானது. இதையடுத்து, ராஜினாமா செய்த பேராசிரியை சஞ்சிதாவை கல்லுாரி நிர்வாகம் சமரசம் செய்ததுடன், தன் செயலுக்கு மன்னிப்பும் கோரியது.இதை ஏற்று, நேற்று முதல் சஞ்சிதா மீண்டும் கல்லுாரி பேராசிரியையாக பணியாற்றி வருவதாகவும், தங்களின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கல்லுாரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.எனினும், பேராசிரியை சஞ்சிதா தரப்பில் கல்லுாரியில் இணையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.