அரசு பள்ளியில் டி.சி., தராமல் ஹெச்.எம்., பிடிவாதம்
ராசிபுரம்: ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், டி.சி., தராமல் தலைமை ஆசிரியர் பிடிவாதமாக இருப்பதால், ஏழை மாணவியர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.ராசிபுரம், சிவானந்தா சாலையில், 10ம் வகுப்பு படித்த மாணவியர், இரண்டு பேர், 457 மற்றும் 485 மதிப்பெண் பெற்றனர். இவர்கள் அதே பள்ளியில், 11ம் வகுப்பு கணித பிரிவில் தமிழ் வழியில் சேர்ந்தனர். பள்ளி திறந்த பின் இலவச பாட புத்தகங்களையும் பெற்றுக்கொண்டனர். 11ம் வகுப்பில் தமிழ், ஆங்கில வழிக்கல்வி ஆகிய இரண்டு பிரிவினருக்கும், ஒரே நேரத்தில் பாடம் நடத்தியதால், தமிழ் வழியில் சேர்ந்த மாணவியர் இருவருக்கும் சரியாக புரியவில்லை. இது குறித்து அவர்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பெற்றோர், அருகில் உள்ள அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவியரை சேர்க்க அழைத்து சென்றனர். மாணவியரை வகுப்பில் உட்கார வைத்த தலைமை ஆசிரியர், பழைய பள்ளியில் இருந்து, டி.சி.,யை (மாற்றுச்சான்றிதழ்) வாங்கி வரச்சொல்லியுள்ளார். ஆனால், சிவானந்தா சாலை பள்ளியில் இரண்டு மாணவியருக்கும், டி.சி., தர மறுத்துவிட்டனர்.அதை தொடர்ந்து, அண்ணாசாலை பள்ளியில், எமீஸ் நெம்பரை வைத்து ஒரு மாணவியின் டி.சி.,யை பெற முயற்சித்துள்ளனர். இதையறிந்த சிவானந்தா சாலை தலைமை ஆசிரியர், 'என்னை கேட்காமல் எப்படி, எமீஸ் நெம்பரை பயன்படுத்தி, டி.சி., பெறலாம்' எனக்கூறி, இரண்டு மாணவியருக்கும், டி.சி., தராமல் அலைக்கழித்துள்ளார். மாணவியரும், அண்ணசாலை பள்ளியில் பாடம் நடத்துவது நன்றாக புரிகிறது என்பதால், சிவானந்தா சாலை பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை.இந்நிலையில், நேற்று காலை, டி.சி., வாங்குவதற்காக, பள்ளிக்கு சென்ற மாணவியர் மற்றும் பெற்றோர், காலை முதல் மாலை வரை காத்திருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மாணவியர் மற்றும் அவர்களது தாயார்கள் கண்ணீர் விட்டு அழுதும், தலைமை ஆசிரியர் மனம் இறங்கவில்லை.இதுகுறித்து, சிவானந்தா சாலை தலைமை ஆசிரியர் வருதராஜிடம் கேட்டபோது, நாங்கள் தான் மாணவியர் இருவரையும், 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற வைத்தோம். பாடம் புரியவில்லை என, எழுதிக் கொடுங்கள் என்று கடிதம் கேட்டுள்ளேன். அண்ணாசாலை தலைமை ஆசிரியர், விபரம் தெரியாமல், எமீஸ் நெம்பர் மூலம் டி.சி.,யை ஆன்லைனில் பெற்றுள்ளார். இதுகுறித்து, சி.இ.ஓ.,விடம் தெரிவிக்காமல், டி.சி., தரமாட்டேன். மற்றொரு மாணவிக்கு வேண்டுமானால், திங்கட்கிழமை டி.சி., தந்து விடுகிறேன் என்றார்.தலைமை ஆசிரியரின் பிடிவாதத்தால், 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஏழை மாணவியர் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நாட்கள் செல்ல, செல்ல வகுப்பறை பாடத்தை தவற விடுவதாக கதறி அழுதனர்.