என் குப்பை என் பொறுப்பு; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
வால்பாறை : வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நகராட்சி துாய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியன் துவக்கி வைத்தார். பேராசிரியர் பெரியசாமி வரவேற்றார்.நகரங்களில் துாய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில், எனது குப்பை, எனது பொறுப்பு என்ற பொருளில், திடக்கழிவு மேலாண்மை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் பேசியதாவது:வால்பாறை நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்படுகிறது. அதன்பின், மறுசுழற்சி செய்யப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் விவசாயத்திற்காக பயன்படுத்த வழங்கப்படுகிறது.பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புற சூழலை சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்வது மாணவர்களின் கடமை.திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து, மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, பேசினார்.துாய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் துளசிமணி, கார்த்திகேயன், நந்தசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்பார்வையாளர் ராம்குமார் நன்றி கூறினார்.