அரசு பள்ளி கட்டும் பணி; அமைச்சர் ஆய்வு
சுந்தர் நகரி: சுந்தர் நகரியில் அரசு பள்ளி கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பள்ளி திறக்கப்படும்' என, மாநில கல்வி அமைச்சர் ஆதிஷி தெரிவித்தார்.வடகிழக்கு டில்லியின் சுந்தர் நகரியில் பல கோடி செலவில் அரசுப் பள்ளி கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கட்டுமானப் பணிகளை மாநில கல்வித்துறை அமைச்சர் ஆதிஷி நேற்று ஆய்வு செய்தார்.இதுகுறித்து 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் தான் ஆய்வு செய்யும் படங்களை பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது:அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் கல்விப் புரட்சிக்கு இந்த பள்ளி மற்றொரு உதாரணம். சுந்தர் நகரியில் கட்டப்பட்டு வரும் புதிய அரசுப் பள்ளியின் கட்டடம், சர்வதேசப் பல்கலைக்கழகக் கட்டடத்துக்கு இணையானது. ஐந்து மாடிகளைக் கொண்ட இந்த பள்ளிக் கட்டடம் முதல்வரின் கனவை நிறைவேற்றுகிறது.உலகத்தரம் வாய்ந்த 120 வகுப்பறைகள், 87 சிறந்த வகுப்பறைகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 8 ஆய்வகங்கள், 5 நுாலகங்கள், பல்நோக்கு அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த பள்ளி கட்டப்பட்டு வருகிறது.அனைத்துப் பணிகளும் இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். விரைவில் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.