மாணவர் மீது நடவடிக்கை? மது பங்காரப்பா பல்டி!
பெங்களூரு: மாணவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் பேசவில்லை என துவக்கக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.இம்மாதம் 20ல் காணொளி காட்சி மூலம், துவக்கக் கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.அப்போது ஒரு மாணவர், கல்வி அமைச்சர் மது பங்காரப்பாவுக்கு கன்னடம் தெரியாது என்று கூறினார். இதனால் கோபமடைந்த அமைச்சர், யார் அப்படி கூறியது? என்று கேட்டார். அத்துடன் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தன் அருகில் இருந்த அதிகாரியிடம் அறிவுறுத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அந்த கூட்டத்தில் கூறவில்லை. மாணவர்களை, பள்ளி முதல்வர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை.என்னை முட்டாள் என்று கூறுகின்றனர். எனக்கு கவலையில்லை. மக்கள், இந்த முட்டாளை வெற்றி பெற வைத்து,அறிவாளிகளை தோற்கடித்துள்ளனர்.பள்ளி மாணவர்களை என் சொந்த குழந்தைகளாகவே பார்க்கிறேன். அந்த விஷயம் குறித்து என்னை ட்ரோல் செய்ய முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களுக்கு, நான் வளைந்து கொடுப்பவன் இல்லை.எங்கள் அரசு, அதிக மானியம் கொடுத்துள்ளது. சொரபாவுக்கு அதிக பஸ்களை கொண்டு வந்துள்ளேன். போக்குவரத்துத் துறையும் அதிக பஸ்களை வாங்கி உள்ளது.மானியம் இல்லாமல், எப்படி இதை செய்வது. வாக்குறுதித் திட்டத்தின் துணைத் தலைவராக இருந்தேன். நாங்கள் அனைத்தும் கணக்கிட்டு, எந்த விளைவும் இல்லை என்று முடிவு செய்தோம்.இவ்வாறு கூறினார்.