தேர்வு வினாத்தாள் செலவுத்தொகையை வழங்காததால் ஆசிரியர்களுக்கு சிக்கல்
ராமநாதபுரம்: தமிழக பள்ளிக்கல்வித்துறை அடைவு ஆய்வு தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. இதில் வினாத்தாட்களுக்கான செலவு தொகையை வழங்காததால் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.மாநில அளவில் அடைவு ஆய்வு தேர்வு பிப்., 4, 5, 6ல் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடக்கிறது. இதற்கான மாதிரி தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.முதல் மாதிரி வினாத்தாள் ஜன., 13 ல், இரண்டாம் மாதிரி வினாத்தாள் ஜன., 20 ல், 3ம் மாதிரி தேர்வு வினாத்தாள் ஜன., 27 ல் வழங்கப்படும். இதனை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் http://exam.tnschools.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கான விடைக்குறிப்புகள் ஜன., 30ல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தொடக்கப்பள்ளிகளில் பிரிண்டர் வசதியில்லை. மூன்றாம் வகுப்பு வினாத்தாள் 14 பக்கங்கள், ஐந்தாம் வகுப்புக்கு 23 பக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திற்கும் பிரின்ட் எடுத்தால் ஒரு பிரின்ட் ரூ.5 வீதம் ரூ.185 செலவிட வேண்டும். இதனை ஜெராக்ஸ் ஆக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் போது ஒரு மாதிரி தேர்வு நடத்த குறைந்த பட்சம் ரூ.1000க்கு மேல் செலவிடும் நிலை உள்ளது.3 மாதிரி தேர்வு, ஒரு மெயின் தேர்வு எனும் போது அடைவு ஆய்வு தேர்வு நடத்த ரூ. 4000 செலவிடும் நிலை உள்ளது. இதற்கான செலவு தொகையை பள்ளிக்கல்வித்துறை வழங்குவதில்லை. ஆசிரியர்கள் தங்கள் கையிலிருந்து பணம் செலவிட்டு அடைவு ஆய்வு தேர்வு நடத்துகின்றனர். எனவே பள்ளிக்கல்வித்துறை அடைவு ஆய்வு தேர்வு நடத்துவதற்கான செலவு தொகையை ஆசிரியர்களுக்கு வழங்கிட முன் வர வேண்டும்.